தஞ்சாவூர்:நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.
இந்நிலையில், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாவை ஆதரித்து, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று (ஏப்.14) கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் சந்திப்பில் பிரச்சாரம் மேற்கொண்டு ‘மைக் சின்னத்தில்’ வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், "நாட்டில் விவசாயி வருமானம் இல்லாமல் கடனாளியானால் அது நாடல்ல சுடுகாடு. இன்று விவசாயியின் இறப்பு ஒரு செய்தி. ஆனால், நாளை உணவின்றி நீங்கள் இறப்பது உங்களுக்கான எச்சரிக்கை முன்னறிவிப்பு. வீடு கட்ட நினைத்தால், கம்பி, சிமெண்ட், செங்கல் என அனைத்திருக்கும் இறுதிவரை வரி தான் கட்டமுடியும், வீடு கட்ட இயலாது.
திமுக, அதிமுக பெரிய கட்சிகள், அதனை வீழ்த்த முடியுமா என்று கேள்வி எழுந்தால், வெல்ல முடியாத படை வரலாற்றிலேயே இல்லை. இங்கிருப்பது திராவிட குப்பை ஊதினால் பறக்கும், தீக்குச்சியை கொண்டு கொளுத்தினால் எரிந்து சாம்பலாகும். கோட்பாடு தெரியாமல் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு, கோடிகளை கொள்ளையடித்தும், அதை பதுக்கியும், ஒதுக்கியும் வைத்து அந்த பணத்தை பாதுகாக்க கடைசி வரை பதவியில் இருக்கிறார்கள்" என்றார்.
தொடர்ந்து, பேசிய அவர், "அப்பா அமைச்சர் என்றால் மகன் எம்.பி, மகன் அமைச்சர் என்றால், அப்பா எம்.பி என்ற நிலை தான் இங்குள்ளது. இந்த பதவிகள் அனைத்தும் 15, 20 குடும்பங்களுக்கு மட்டும் பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் மற்றும் பாஜக என இரு கட்சிகளும், அதற்கு துணை போன திமுக, அதிமுக போன்ற கூட்டணி கட்சிகள் தான் நாட்டில் முறையற்ற நிர்வாகம், சகித்து கொள்ள முடியாத ஊழல் லஞ்சம் ஆகியவற்றிற்கு காரணம்.