சென்னை:18வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக இந்தியா முழுவதும் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி, முதல் கட்டத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தேர்தலில் ஓட்டு போட்டதற்கான அடையாளம் இருந்தால், தேசிய தேர்வு முகமை நடத்தக்கூடிய நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்க முடியாது என செய்தி பரவுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தேசிய தேர்வு முகமை இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
அதன் படி, "தேர்தலில் ஓட்டு போட்டதற்கான அடையாளமாக வைக்கப்படும் மை விரலில் வைக்கப்பட்டு இருந்தால், தேசிய தேர்வு முகமை நடத்தக்கூடிய தேர்வுகளில் பங்கேற்க முடியாது என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை. அதுபோன்ற எந்த உத்தரவையும் தேசிய தேர்வு முகமை பிறப்பிக்கவில்லை” என தேசிய தேர்வு முகமை விளக்கம் தெரிவித்துள்ளது. மேலும், போலியான செய்திகளை நம்பாமல், ஜனநாயக கடமையைக் ஆற்றவும் தேசிய தேர்வு முகமை (NTA) அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, "தேசிய தேர்வு முகமை, இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றும் (ஏப்.9), நாளையும் (ஏப்.10) என இரு நாட்களுக்கு அவகாசம் வழங்கி உள்ளது. இதன் மூலம் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், ஏற்கனவே விண்ணப்பித்திருந்த விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள நினைப்பவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு! - NEET Exam