சென்னை:நாடாளுமன்றத் தேர்தலில் பானை சின்னம், பொதுத் தொகுதியான வடசென்னை உட்பட 3 இடங்களில் வெற்றி பெறும் என வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியின் சுயேச்சை வேட்பாளராகப் பானை சின்னத்தில் போட்டியிடும் பா.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில், திமுக சார்பில் கலாநிதி வீராசாமி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ராயபுரம் மனோகர் இரட்டை இலை சின்னத்திலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜகவில் பால் கனகராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும், பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில், யானை சின்னத்தில் இக்பால் போட்டியிடுகிறார். இந்நிலையில், சுயேச்சைகளாக 31 பேர் களத்தில் உள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், விடுதலை சிறுத்தை கட்சிக்குச் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பானை சின்னத்தை சுயேச்சை வேட்பாளர் பா.பாலமுருகன் பெற்றுள்ளார்.
பொதுத் தொகுதியில் சுயேச்சையாகப் பானை சின்னத்தைப் பெற்றுள்ள வேட்பாளர் பா.பாலமுருகன், ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி கட்டாயம் என கொண்டுவரப்பட்ட பொழுது, அதனை எதிர்த்து போராட்டம் நடத்தினேன். ஏழை பட்டியலின விவசாயிகள் நிலத்தை அமலாக்கத்துறையினர் அபகரிக்கும் வகையில் சம்மன் அனுப்பிய பொழுது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தேன்.
ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தாலும், வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நான் நிற்பதற்கு முக்கிய காரணம், இந்தப்பகுதி தொழிற்சாலை கழிவுகளால் பாதிக்கப்பட்டு இருப்பதே. எண்ணூரில் நடைபெற்ற கோரமண்டல் உர நிறுவனத்தின் வாயு கசிவினால் பாதிக்கப்பட்ட போது, பணியிலிருந்து ஓய்வு பெற்ற மறுநாள் முதல் போராட்டத்தில் கலந்து கொண்டேன்.
வேளச்சேரி பகுதிகளைப் போல், வடசென்னையையும் முழுமையான குடியிருப்பு பகுதியாக மாற்ற வேண்டும். கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகளை, படிப்படியாக இங்கிருந்து வெளியேற்ற வேண்டும். வடசென்னை பகுதியில் போதுமான அளவு கல்லூரிகள் எதுவும் கிடையாது. வடசென்னையில் ஏற்கனவே தொழிற்சாலைகள் இருந்த பகுதியில் தற்போது காலியிடங்கள் தான் உள்ளன.
அங்கு பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட ஐந்து கல்லூரிகள் கட்டலாம். இங்குள்ளவர்கள் படிப்பதற்காக காட்டாங்குளத்தூர் வரை செல்லும் நிலை உள்ளது. எனவே, அரசு கல்லூரிகளைக் கட்ட வேண்டும். வடசென்னையில் ஆரம்பச் சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக சிகிச்சை தர வேண்டும். திருவெற்றியூரில் உள்ள சுகாதார மையத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றும் அளவிற்கு இடம் இருந்தாலும், அங்கு மருத்துவர்கள் இல்லாத நிலை உள்ளது.
மக்களின் பிரச்சினைகளைச் சாதாரணமாகக் கேட்கும் பொழுது சரியான பதில் வராது. அதுவே மக்கள் பிரதிநிதியாகக் கேட்டால், அரசிடமிருந்து சரியான பதில் வரும். மருத்துவமனைகளைத் தரம் உயர்த்தி, வசதியானவர்களுக்குக் கட்டண சிகிச்சையும், ஏழைகளுக்கு இலவச சிகிச்சையும் அளிக்க வேண்டும். வட சென்னையில் உள்ள கோயில், குளங்களை மழைநீர் சேகரிப்பு நிலையங்களாக மாற்ற, குளத்திற்கு மழைநீர் வரும் வகையில் வடிகால்களை அமைக்கலாம்.
இது போன்று பல்வேறு திட்டங்களை வைத்துள்ளேன். என்னிடம் பணபலம், படைபலம் என எதுவும் கிடையாது. ஆனால் மற்ற வேட்பாளர்களை விட நான் சிறந்த வேட்பாளர். பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளேன். பண பலம், படைபலம் உள்ள வேட்பாளர்கள் மக்களின் வீட்டுக் கதவைத் தட்டி வாக்கு சேகரிப்பார்கள். மக்கள் எனது பணியை வைத்துத் தான் என்னைத் தெரிந்து கொள்ள முடியும். மக்களை நேரில் சென்று சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளேன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எனது நண்பர். 2004ஆம் ஆண்டு தான் முதன் முதலாக அவரை நான் சந்தித்தேன். 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, திமுக தலைவராக இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை திமுக கூட்டணியிலிருந்து வெளியேற்றிவிட்டு, பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் கூட்டணி அமைத்தார்.
வெளியில் பாமகவும், விடுதலை சிறுத்தைகளும் ஒன்றாக களப்பணியிலிருந்தனர். இதனைப் பார்க்கும் பொழுது நான் அதிர்ச்சி அடைந்தேன். ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவரை இதுபோன்று செய்கிறாரே என்ற வருத்தம் எனக்கு இருந்தது. இதையடுத்து, நம்மால் முடிந்தவற்றை அவருக்குச் செய்ய வேண்டும் என்பதற்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைச் சந்தித்து, நான் சேலத்தில் வருமான வரித்துறையில் பணிபுரிவதாகவும், அங்கு வந்தால் கட்சிக்காக நிதி திரட்டித் தருவதாகவும் கூறினேன்.
அதன்படி அங்கு வந்த அவருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய், கட்சி நிதியாகப் பெற்றுத் தந்தோம். அதனைத் தொடர்ந்து, பல்வேறு அமைப்பினரும் அவருக்குக் கட்சி நிதி அளித்தனர். 2006ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தனர். அப்பொழுது எனது ஐ.ஏ.எஸ் நண்பர் ஒருவர் மூலம் அவரை டெல்லிக்கு அழைத்துச் சென்று, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டோம். விடுதலை சிறுத்தை கட்சியுடன் நானும் பயணித்துள்ளேன்.
மற்றவர்கள் தங்களுக்குத் தேவையானதைக் கேட்டுப் பெறுவதில் உறுதியாக இருக்கும் பொழுது, ஏன் விட்டுக் கொடுத்துச் செல்கிறீர்கள் எனக் கேட்டேன். நான் பார்த்த வரையில் திருமாவளவன் மேடையில் வேகமாகப் பேசுவார். ஆனால் மனதளவில் மிகவும் மென்மையானவர். மற்றவர்களின் நிலையைக் கூறும் பொழுது அதனை ஏற்றுக் கொள்பவர். திமுகவில் ஒரு பொதுத் தொகுதி உட்பட 3 தொகுதிகளைக் கேட்டார்.
ஆனால் அவர்கள் கொடுக்கவில்லை. எனவே, பொதுத் தொகுதியான வடசென்னையில் நான் பானை சின்னத்தில் நிற்கிறேன். விடுதலை சிறுத்தைகள் எனக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பானை சின்னம் மூன்று இடங்களில் ஜெயிக்கப் போகிறது. சிதம்பரத்தில் திருமாவளவன், விழுப்புரத்தில் ரவிக்குமார், வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நான். திமுகவால் மறுக்கப்பட்ட பொதுத் தொகுதியான வடசென்னையை நான் எடுத்துக் கொண்டேன். இந்த தொகுதியில் பானை சின்னத்தில் நின்று நான் வெற்றி பெறுவேன்.
பானை சின்னத்தை நான் பிரபலமாக்கவில்லை, திருமாவளவன் தான் பிரபலமாக்கிவிட்டார். பானை சின்னம் எல்லா சேரிகளுக்கும் சென்று விட்டது. பட்டியலினத்தைச் சேர்ந்தோர் உள்ளத்திலும் பானை சின்னம் இருக்கிறது. 2016ஆம் ஆண்டு ஆர்கேநகர் சட்டமன்றத் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்ட பொழுது, எனது மனைவி சுயேச்சையாகப் போட்டியிட்ட காலத்திலேயே பானை சின்னத்தை வாங்கி உள்ளார்.
கடந்த தேர்தலில் சேலத்தில் பானை சின்னத்தில் தான் எனது மனைவி நின்றார். எனவே பானை சின்னம் எங்களுக்கு புதியது கிடையது. வடசென்னை உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் ஜெயிப்போம்.
மக்களிடம் பானை சின்னம் சென்று சேர்ந்து விட்டது. வேட்பாளரான நான் தான் சென்று சேர வேண்டும். துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்துக் கொண்டிருக்கிறேன். அதனை மக்களிடம் கொடுத்து வாக்கு சேகரிக்க உள்ளேன்.
வட சென்னையில் 50 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். வடசென்னையில் எல்லா மக்களுடனும் பழகி உள்ளேன். இங்கு வரும் வேட்பாளர்களுக்கு, மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் செல்வாக்கு திமுகவுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் தெரியும். திருச்சியில் 'வெல்லும் ஜனநாயகம்' என்ற மாநாட்டை நடத்திய பொழுது, எத்தனை லட்சம் பேர் வந்தனர்.
அவர்கள் யாரும் காசு கொடுத்து வரவழைக்கப்படவில்லை. இரண்டு வேட்பாளர்களுக்கும் எவ்வளவு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுமோ, அவ்வளவு பேர் மட்டுமே மாநாட்டிற்கு வந்தனர். திமுக உள்ளிட்ட வேறு எந்த கட்சியால், இதுபோன்ற மாநாட்டிற்குக் கூட்டத்தைக் கூட்ட முடியும். இதுபோன்று உள்ள ஒருவரை ஏன் சிறுமைப்படுத்துகிறீர்கள். 2004ஆம் ஆண்டு திருமாவளவனை வெளியேற்றும் பொழுது, நீங்கள் அவரை சிறுமைப்படுத்தவில்லை.
பட்டியலினத்தைச் சிறுமைப்படுத்தினீர்கள். நான் சிரமப்பட்டதாகவே உணர்ந்தேன். இன்று அவருக்கு இரண்டு தொகுதிகள் கொடுத்த போதும், அது போன்று தான் நான் உணர்ந்தேன். சிறுமைப்படுத்தப்படுவதை அவர் பொறுத்துக் கொள்ளலாம், அவருக்குப் பெருந்தன்மை இருக்கலாம். ஆனால் பட்டியலின மக்கள் அதுபோன்று எடுத்துக் கொள்ள முடியாது. அது அடிமைத்தனமாகப் போய்விடும். நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் எனக் கூறுவதைப் பெருந்தன்மையாக எடுத்துக் கொள்ள முடியாது.
வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் இது போன்ற வரலாற்றைக் கூறி வாக்கு சேகரிக்க உள்ளேன். பிற தொகுதிகளில் பானை சின்னத்தில் நிற்பவர்களுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் எந்த தொடர்பும் இருக்காது. மற்றவர்களுக்கும், இரண்டு தொகுதி கொடுத்த நிகழ்வுக்கும் எந்த தொடர்பும் இருக்காது. ஆனால், எனக்கு இருக்கிறது. அதில் நான் பாதிக்கப்பட்டவன். எனவே தான் பானை சின்னத்தைப் பெற்றுள்ளேன்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:3 கூண்டு, ராட்சத வலைகள் ரெடி.. மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையின் திட்டம் என்ன? - Leopard Movement In Mayiladuthurai