தென்காசி: வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்து, தற்போது அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தென்காசி நாடாளுமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணனை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தென்காசி மாவட்டம் கடையநல்லூர், புளியங்குடி பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.
பரப்புரையில் சீமான் பேசுகையில், "கனிம வளங்கள் அனைத்தும் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த கனிம வள கொள்ளை ஆட்சி நடத்துபவர்களால் தான் நடைபெறுகிறது. இதனைத் தடுக்க ஆட்சி அதிகாரத்தை எங்களுக்கு வழங்க வேண்டும்.
திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் வெற்றி பெறுவது என்பது ஒரு சாதாரண நிகழ்வு. ஏனென்றால், இவர்கள் பலமுறை தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆனால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வென்றால் அது சரித்திர நிகழ்வு" என பேசினார்.
தொடர்ந்து, "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் ஏழை மக்களுக்கு கொடுத்தவர். கர்மவீரர் காமராஜர் படிக்கவில்லை என்பதற்காக, யாரும் படிக்கக் கூடாது என்று அவர் நினைக்கவில்லை. அனைத்து மக்களும் படிக்க வேண்டும் என்பதற்காக கல்விக் கண் கொடுத்தவர்.
எவரும் ஓட்டு கேட்கலாம் அவர் அவர் சின்னத்திற்கு. ஆனால், என் சின்னம் இல்லாமல் எவரும் ஓட்டு கேட்க முடியாது. மேலும், தங்கள் கட்சிக்கு ஒலிவாங்கி சின்னம் வழங்கப்பட்டுள்ளதால், பாஜகவின் B Team நாம் தமிழர் கட்சி இல்லை என்பது உறுதியாகி இருப்பதாக” அவர் பேசினார்.
இதையும் படிங்க:"நாங்கள் யாருக்கும் காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் கிடையாது" - கனிமொழி தாக்கு! - Kanimozhi In Coimbatore