மதுரை:மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, மதுரை-வாடிப்பட்டி முதன்மைச் சாலையில் அமைந்துள்ளது பேரூராட்சிக்கு சொந்தமான மயானம். வாடிப்பட்டியில் நிகழும் பல்வேறு இறப்புகளுக்கு இறுதிச் சடங்கு இங்குதான் நடைபெறுகிறது. இந்நிலையில், இச்சுடுகாட்டில் மின்விளக்கு வசதி செய்து தரப்படாததால், இரவு நேரத்தில் இறந்தவர்களின் இறுதிச் சடங்கை உறவினர்களின் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் நடத்துவது வழக்கமாகியுள்ளது.
வாடிப்பட்டியைச் சேர்ந்த அஜந்தா ராஜகோபால் என்பவர், கடந்த நவம்பர் 20-ஆம் தேதி காலமானார். அவரது இறுதிச்சடங்கு வாடிப்பட்டி மயானத்தில் இரவு நடைபெற்றது. அச்சமயம் மின் விளக்கு இல்லாத காரணத்தால், உறவினர்கள் தங்கள் கையோடு கொண்டு வந்த மொபைல் டார்ச் வெளிச்சத்தில் இறுதிச்சடங்கு செய்ததுடன், உடலையும் எரியூட்டியுள்ளனர்.
டாக்டர் கே.எஸ்.அசோக்குமார், மதிவாணன் பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu) இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, இறந்தவரின் குடும்பத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'பிரேதத்தை தூக்கிக் கொண்டு மயான மேடையை மூன்று முறை சுற்றி வரும்போது, இருட்டில் தடுமாறி விழும் நிலை ஏற்பட்டது. மொபைல் டார்ச் உதவியால் மயான மேடையில் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினோம். இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மனு கொடுத்தும்கூட இதுவரை நடவடிக்கை இல்லை' என வேதனை தெரிவித்தனர்.
வெட்கக்கேடான விஷயம்
வாடிப்பட்டி பேரூர் அதிமுக செயலாளர் டாக்டர் கே.எஸ்.அசோக்குமார் இதுகுறித்து ஈடிவி பாரத் ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில், 'எனது தந்தையாரின் நண்பர் இறந்ததை அடுத்து, அவருக்கான இறுதிச்சடங்கு வாடிப்பட்டி சுடுகாட்டில் இருட்டில் நடைபெற்றதாக அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன். இந்த நவீன உலகத்தில் மொபைல் டார்ச் மூலம் இறுதிச் சடங்கு செய்வது வெட்கக்கேடான விஷயம். நாம் பல்வேறு வகையிலும் முன்னேறிக் கொண்டிருந்தாலும், இதுபோன்ற நிகழ்வுகள் வேதனை தருகின்றன. ரூ.1 கோடி மதிப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே மின் மயானம் கட்டப்பட்டும்கூட, இதுவரை அது பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படவில்லை.
பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்
பொதுவாக இறுதிச்சடங்குக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவாகும் நிலையில், மின்மயானம் பயன்பாட்டிற்கு வந்தால் ஏழை, எளிய, அடித்தட்டு மக்கள் பெரிதும் பயனடைவர். ஆதரவற்ற பிணம் கிடைத்தால், அதைக் கொண்டு பரிசோதனை செய்த பிறகுதான், மின்மயானத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியும் என்று ஒரு பதிலைத் தருகிறார்கள். எங்களது அருணா அம்மா மக்கள் குறைதீர்க்கும் மையம் சார்பாக கடந்த ஓராண்டிற்கு முன்பாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு என்று அமரர் ஊர்தி ஒன்றை இலவசமாக இயக்கி வருகிறோம். இதில் இதுவரை 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதில் பயனடைந்துள்ளன. தனிநபர் இதுபோன்ற சேவையைச் செய்யும்போது, பேரூராட்சி நிர்வாகம் மின்விளக்கு வசதிகூட செய்து தரவில்லை என்பது கவலைக்குரியது' என்றார்.
அரசியல் மட்டுமே செய்கிறார்கள்
வாடிப்பட்டி சிபிஐ (எம்.எல்.) மாவட்டச் செயலாளர் மதிவாணன் கூறுகையில், 'இறந்தவர்களை மிகுந்த மதிப்பிற்குரிய வகையில் அடக்கம் செய்வது என்பது தமிழர் மரபு. அதனை பேரூராட்சி நிர்வாகம் செய்யத் தவறியிருப்பது வருத்தத்திற்குரியது. அதில் தற்போது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்தாலும், அதில் திருப்தியில்லை. வாடிப்பட்டி பேரூராட்சி மக்கள் நலனில் கவலை கொள்வதாகத் தெரியவில்லை. இங்குள்ள கவுன்சிலர்கள் திமுக, அதிமுக என இரண்டு பிரிவாகப் பிரிந்து நின்று அரசியல் மட்டுமே செய்கிறார்கள். திமுக பேரூராட்சி நிர்வாகத்திற்கு வந்த நாள் முதல் நிர்வாகச் சீர்கேடு அதிகமாகவே உள்ளது. பேரூராட்சி அலுவலகத்திற்கு அருகே உள்ள ஆர்வி நகரில் கழிவுநீர் வழிந்து நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது. மழைநீர் வடிகால்களில் சாக்கடை நீரைக் கலக்கின்ற செயலை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதேபோன்று கட்டப்பட்ட மின்மயானத்தை திறப்பதற்கு இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்' என்றார்.
பெரும்பாலான மயானங்களுக்கு இதே நிலை
வாடிப்பட்டி அருகேயுள்ள கச்சக்கட்டியைச் சேர்ந்த பிச்சைமணி நம்மிடம் பேசுகையில், 'வாடிப்பட்டி மயானம் மட்டுமல்ல, இதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களின் மயானங்களும் இதே நிலையில்தான் உள்ளன. பெரும்பாலான மயானங்கள் தனியாரின் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனையெல்லாம் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக சரி செய்ய வேண்டும்' என்றார்.
இதுகுறித்து வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'மயானத்தில் மின் விளக்கு குறித்த புகார் வந்தவுடன், அதற்குரிய நடவடிக்கைகளை நாங்கள் தொடங்கிவிட்டோம். மிகப் பெரிய எல்இடி பல்ப் மயானத்தில் பொருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அப்பிரச்சனையை சரி செய்துவிடுவோம். மின் மயானத்தைத் திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்பதோடு நிறுத்திக் கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்