சென்னை: தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் காலை முதல் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக திருச்சி மதுரை தென்காசி இளையான்குடி கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
திருச்சியில் உள்ள யூடியூபரும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான சாட்டை துறைமுருகன் வீடு அலுவலகத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதேபோல் கோவை மாவட்டத்தில் உள்ள இரண்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதபேரி கிராமத்தைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் இசை மதிவாணன் வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகியான இடும்பாவனம் கார்த்திக்கு தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. செல்போன் மூலம் குறுஞ்செய்தி தகவலை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவருக்கு அனுப்பியுள்ளனர்.
ஆனால் அவர் வெளியூரில் இருப்பதால் பிப்ரவரி 5ஆம் தேதி நேரில் ஆஜராகுவதாக தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு பதிலளித்துள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொடர்புடைய சென்னை, கொளத்தூர், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வெளிநாட்டில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் ஏதாவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் அவர்களது வங்கி கணக்குகளில் பண பரிவர்த்தனைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டு, சோதனை முடிவில் முகாந்திரம் கிடைத்தால் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, நேரில் வரவழைத்து விசாரணை செய்ய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சோதனையில் வேறு யாருக்காவது தொடர்பு இருந்தால் சோதனை செய்யும் இடங்கள் அதிகரிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. மேலும் நாம் தமிழர் கட்சி நிர்வாகியான சாட்டை துரை முருகன் வீட்டில் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனைக்கு பின்னர் அவர் விசாரணைக்கு ஆஜராகும் படி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவ்ல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மகளைக் கொன்ற தாய் தற்கொலை..முதல் 'ஐஆர்சிடிசி' ஆப் இணையம் மூலம் ரூ.1 லட்சம் அபேஸ்! வரை சென்னை குற்றசெய்திகள்