சென்னை:வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தொடரப்பட்ட மனுவை, தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் வேளச்சேரி ஏரிக்கு மேற்புறம் (upstream) பகுதிகளில் புதிய நீர்நிலைகளை உருவாக்க முடியுமா? அல்லது ஏற்கெனவே இருக்கும் நீர்நிலைகளை ஆழப்படுத்த முடியுமா? என அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (செப். 23) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வேளச்சேரி ஏரிக்கு மேற்புறம் ஆதம்பாக்கம் ஏரி மட்டும் இருப்பதாகவும், வேறு நீர்நிலைகள் இல்லை எனவும் நீர்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:நெல்லையில் இளைஞரின் பூணூலை அறுத்த விவகாரம்; குடும்பத்தாரை நேரில் சந்தித்து எல்.முருகன் ஆறுதல்!
இதனைக் கேட்ட தீர்ப்பாயம், கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை பசுமைப் பூங்காவாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ள நிலையில், நீர்நிலையுடன் கூடிய பூங்காவாக உருவாக்கினால், பெருமழை காலங்களில் அதிக நீரைச் சேமிக்க முடியும். வெள்ளம் ஏற்படுவதையும் தடுக்க முடியும். அதனால், கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை நீர் நிலையாக மாற்றுவது குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிந்து தெரியப்படுத்துமாறு அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நாளை (செப் 24) ஒத்தி வைத்தனர்.