சென்னை: தமிழ்நாட்டில் தலித்துகளுக்கான கட்சியாக அறியப்பட்டு, அனைத்து சமூகத்தினருக்கான கட்சியாக வளர துடிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முதன்முதலாக களமிறங்கியது. அந்த தேர்தலில் தமாகாவுடன் கூட்டணி அமைத்த விசிக, பெரம்பலூர் மற்றும் சிதம்பரம் தனித் தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. அந்த வெற்றி அளித்த நம்பிக்கையில் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கடலூரில் போட்டியிட்ட திருமாவளவன் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். பின்னர் திமுக கூட்டணியில் தனித்து செயல்படமுடியவில்லை எனக்கூறி பதவியை ராஜினாமா செய்தார் திருமாவளவன்.
அதனை தொடர்ந்து 2004 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு 2 லட்சத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழகத்தில் தவிர்க்கமுடியாத அரசியல் புள்ளியாக உருவெடுத்தார். தற்போது வரை தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சியாக இருந்துவரும் விசிகவுக்கு 2024 பொதுத்தேர்தல் முடிவுகள் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இரு தொகுதிகளில் போட்டியிட்ட விசிக இரண்டிலும் வெற்றி பெற்றபோதும், ஒரு தொகுதியில் மட்டுமே தனிச் சின்னத்தில் போட்டியிட்டதால் மாநில கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
விசிகவுக்கு அங்கீகாரம்: ஆனால், இம்முறை சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் விசிக பானை சின்னத்தில் போட்டியிட்டது. இதில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் 1,03,554 லட்சம் வாக்குகள் மற்றும் விழுப்புரத்தில் ரவிக்குமார் 70,703 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இரு தொகுதிகளிலும் விசிக தனி சின்னத்தில் போட்டியிட்டு வென்றுள்ளதால் அதற்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது.
நாம் தமிழர்: சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி முதன்முதலில் 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அந்த தேர்தலில் 1.07 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கு வங்கியை கணிசமாக உயர்த்தியது. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட இக்கட்சியின் வாக்கு சதவீதம் 3.87 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், 2021 சட்டமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் 5 ஆவது இடத்துக்கு முன்னேறியது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 6.58% வாக்குகளைப் பெற்றிருந்தது. இந்த நிலையில், தற்போது நடைபெற்று முடிந்துள்ள 2024 மக்களவை பொதுத்தேர்தலில் 8.22% வாக்குகளை பெற்று மாநில கட்சிக்கான அந்தஸ்த்தை பெறவுள்ளது நாம் தமிழர் கட்சி.
விசிகவை பொறுத்தவரை, நாம் தமிழர் கட்சி தேர்தலை சந்திப்பதற்கு முன்பாகவே தொடங்கப்பட்டு சட்டமன்றம், நாடாளுமன்றம் என இரு தேர்தல்களிலும் வெற்றியை கண்டுள்ளது. குறிப்பாக திமுக, அதிமுக போன்ற தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வளர்ந்த கட்சியாகவே விசிக பார்க்கப்படுகிறது.