சென்னை:சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நாட்டிற்கு தாய் ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா, இண்டிகோ ஆகிய விமானங்கள் தினசரி நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் பயணிகள் தாய்லாந்து சுற்றுலா செல்வதால், இந்த 3 விமானங்களிலும் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும்.
இதனை குறைக்கும் வகையில் சென்னையில் இருந்து தாய்லாந்திற்கு புதிய விமான சேவையை 'தாய் லயன் ஏர்லைன்ஸ்' (Thai Lion Air) என்ற விமான நிறுவனம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த விமானம் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய 4 நாட்கள் இயங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய் லயன் ஏர்வேஸ் விமானம், பாங்காங்கில் இருந்து புறப்பட்டு அதிகாலை 1 மணிக்கு சென்னை வரும். மீண்டும் சென்னையில் இருந்து அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு தாய்லாந்து தலைநகர் பாங்காங் சென்றடையும். இந்த விமானத்தின் பயண நேரம் 3 மணி 40 நிமிடங்கள் ஆகும். இது சுற்றுலா பயணிகள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரிய விமானம் இயக்க முடிவு :அதைப்போல் சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் பயணிகள் விமான நிறுவனம் வாரத்தில் மூன்று நாட்கள் நேரடி விமான சேவைகளை இயக்கி வருகிறது. ஹாங்காங் தொழில் நகரமாகவும், அதோடு பல்வேறு மேலை நாடுகளுக்கு இணைப்பு விமான நிலையமாகவும் இருப்பதால் சென்னையில் இருந்து ஹாங்காங் விமானத்தில் அதிக அளவு பயணிகள் பயணிக்கின்றனர்.
இதையும் படிங்க:"மின் கட்டணத்தை பணமாக பெற அனுமதியுங்கள்"- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு கடிதம்!
இந்த நிலையில் இப்போது கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், ஹாங்காங் - சென்னை - ஹாங்காங் வழித் தடத்தில் ஏர் பஸ் 330 ரக விமானத்தை இயக்கி வருகிறது. இதில், அதிகபட்சமாக 290 பயணிகள் பயணிக்க முடியும். ஆனால் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், இந்த விமான நிறுவனம் இப்போது ஏர் பஸ் 350 - 900 ரக பெரிய விமானங்களை இயக்க தொடங்கியுள்ளது.
இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 350 க்கும் அதிகமான பயணிகள் பயணிக்க முடியும். இது பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.