திருநெல்வேலி: சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஜனவரி 19ஆம் தேதி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவில் பங்கேற்று அந்த நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்திருந்தார். கேலோ இந்தியா விளையாட்டு தொடக்க விழாவிற்குப் பிரதமருக்கு திமுக அரசு அழைப்பு விடுத்ததை விமர்சித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் துவக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவைக் கடந்து, அது முழுக்க முழுக்க பிரதமர் மோடிக்கு திமுக அரசு அளித்த வரவேற்பு நிகழ்ச்சியாகவே இருந்தது.
கோபேக் மோடியை ட்ரெண்டாக்கியவர்கள் இன்றைக்கு கம்பேக் மோடி, வெல்கம் மோடி என புகழாரம் சூட்டத் தொடங்கி விட்டார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்னர் வேறு நிலைப்பாடு என இரட்டை நிலைப்பாட்டை திமுக பின்பற்றத் தொடங்கியுள்ளது.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தொடக்க நிகழ்ச்சிக்குப் பிரதமர் மோடியை அழைக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் எங்கு ஏற்பட்டது. கடந்த ஆண்டு பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி அம்மாநில முதல்வரால் மட்டுமே தொடங்கி வைக்கப்பட்டு நடத்தப்பட்டது.
இப்படி இருக்கும் சூழலில், பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருப்பதாகச் சொல்லும் திமுக அரசு வலியச் சென்று பிரதமருக்கு அழைப்பு விடுத்து மிகப் பிரம்மாண்டமான வரவேற்பைக் கொடுத்துள்ளது. திமுக கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கையைக் கூட பரிசீலிக்காமல் எந்த அடிப்படையில் இத்தகைய பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்பது தெரியவில்லை.
பாஜக அரசின் திட்டங்களுக்கு நாங்கள் எதிர்ப்பில்லை என்பதனை காட்டுவதற்காகவா அல்லது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரை முன்னிலைப்படுத்தவா என்கிற கேள்வி எழுகிறது. எவ்வாறாயினும் திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆளுநர் பதவியை நீக்க தீர்மானம் - சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் முன்மொழிந்தார் உதயநிதி ஸ்டாலின்!