திருநெல்வேலி:தென் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கள்ளக்கடல் உருவாக வாய்ப்பு இருப்பதாக, இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தவகையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கள்ளக்கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டப்புளி முதல் கூடு தாழை வரை உள்ள கடற்கரைகளில் கள்ளக்கடல் என்று அழைக்கப்படும் அதீத அலை ஏற்படும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கடல்சார் தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் 2.4 மீட்டர் முதல் 2.7 மீட்டர் வரை கடல் அலை மேலெழும்ப கூடும் எனவும், ஜுன் 11 ம் தேதி இரவு 11:30 மணிவரை இது நேரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கி எழும் அலைகளின் எழுச்சி நாளை இரவு 11.30 மணி வரை 1.6 மீ முதல் 1.9 மீ வரை அலைகள் எழலாம்.
எனவே திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்ட புளி முதல் கூடு தாழை வரை உள்ள கடற்கரையோர மீனவர்கள் கவனமாக இருக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. கடல் நீரோட்டத்தின் வேகம் ஒரு வினாடிக்கு புள்ளி நான்கு மீட்டர் முதல் புள்ளி ஐந்து மீட்டர் வரை நாளை காலை 10:00 மணி வரை இருக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.