தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"2026 சட்டமன்றத் தேர்தலில் 50 தொகுதிகளில் போட்டி" - நெய்தல் மக்கள் கட்சி தலைவர் கு.பாரதி தகவல்! - NEITHAL MAKKAL KATCHI BHARATHI

மீனவர்கள் நலனை காப்பாற்றும் வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 50 தொகுதிகளில் நெய்தல் மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுவோம் என அக்கட்சியின் தலைவர் கு.பாரதி தெரிவித்துள்ளார்.

நெய்தல் மக்கள் கட்சி தலைவர் கு.பாரதி
நெய்தல் மக்கள் கட்சி தலைவர் கு.பாரதி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2024, 3:42 PM IST

சென்னை: மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்துவதை தடுக்க உடனடியாக மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெய்தல் மக்கள் கட்சி தலைவர் கு.பாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக மீனவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று, வியாழக்கிழமை (நவ.21) காசிமேட்டில் உலக மீனவர் தின விழாவும், நெய்தல் மக்கள் கட்சியின் சார்பில் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றுள்ளது. இதில், அக்கட்சியின் தலைவர் கு.பாரதி, மாநில துணை தலைவர் கானத்தூர் எம்.ஆறுமுகம், மாநில இணை செயலாளர் ஆர்.நேரு, மாநில பொருளாளர் ச.ரூப்பேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நெய்தல் மக்கள் கட்சி தலைவர் கு.பாரதி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து நெய்தல் மக்கள் கட்சி தலைவர் கு.பாரதி பேசியதாவது, “தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு கட்சியினரும், மீனவர்களை பழங்குடியினர் இன பட்டியலில் சேர்ப்பதாக வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால், வெற்றி பெற்ற பின்னர் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடற்கரை பகுதியில் வசிக்கும் பாரம்பரிய மீனவர்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்தில் இலவச மனை பட்டா வழங்க வேண்டும். கடற்கரை பகுதிகளை சுற்றுலா பகுதியாகவும், பொழுதுபோக்கு இடமாகவும் மாற்றுவதற்கு தமிழக அரசு மற்றும் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகளை பறிமுதல் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:படகுகளை விடுவிக்க மீனவர்கள், தமிழக அரசு பலமுறை வலியுறுத்தியும் கடற்படைக்கு வழங்க உத்தரவு- இலங்கை அரசின் பிடிவாதம்!

இலங்கையில் தற்போது புதிய அரசு பதவி ஏற்ற நிலையில், இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நல்ல நிலைமையில் உள்ள படகுகளை, இலங்கை கடற்படை பயன்பாட்டிற்கு வழங்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக மீனவர்களின் உரிமைகளை மீட்டுத்தர, மத்திய மற்றும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இலங்கை - ராமேஸ்வரம், இலங்கை - கன்னியாகுமரி என கடல் போக்குவரத்தில் ஆர்வம் காட்டும் அரசுகள் கடற்கரையோரம் உள்ள மீனவர்களின் இடங்களை சுற்றுலா தளங்களாக மாற்றுவதற்காக, மீனவர்களிடம் இருந்து அவர்களுடைய நிலங்களை பறிப்பதை நிறுத்த வேண்டும். கடற்கரை ஓரத்தில் உள்ள மீனவர்களின் இடத்தை, மீன் பிடி தொழிலுக்கு மட்டுமே பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், இந்திய கடல் பகுதியில் கடல் காற்றாலைகளை அமைக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு இந்திய அரசும் உறுதுணையாக இருந்து வருகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில் 37 கடலோர சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மீனவர்கள் அதிகளவில் வாழும் 15 உள்நாட்டு சட்டமன்றத் தொகுதிகளை கண்டறிந்துள்ளோம். சுமார் 50 தொகுதிகளில் மீனவர்கள் நலனை காப்பாற்றும் வகையில் நெய்தல் மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுவோம். மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள இயக்கங்களுடன் இணைந்து தேர்தல் பணியாற்ற தயாராக உள்ளோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details