தமிழ்நாடு

tamil nadu

பெண்களுக்கு தனி விளையாட்டு மைதானம் தேவையா?.. காரணங்களும், கேள்விகளும்! - separate playground for girls

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2024, 8:47 PM IST

Necessity of separate playground for girls: இந்தியாவில் 57 சதவீதம் பெண்கள் விளையாட்டு உள்ளிட்ட உடலியல் செயல்பாடுகள் இன்றி இருக்கின்றனர் என்கிறது லான்செட் ஆய்வறிக்கை. இந்தியாவின் நகரச் சூழலில் பெண் குழந்தைகள் விளையாடுவதற்கான வாய்ப்புகளே இல்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றனர் குழந்தைகள் நல செயல்பாட்டாளர்கள்.

கோ-கோ மற்றும் பந்து விளையாடும் பெண் குழந்தைகள்
கோ-கோ மற்றும் பந்து விளையாடும் பெண் குழந்தைகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நகரின் ஏதேனும் ஒரு மைதானத்திற்குச் சென்று பார்த்திருக்கிறீர்களா? குழந்தைகள் கிரிக்கெட், கால்பந்து என விளையாடிக் களிக்கும் இந்த மைதானத்தில் எத்தனை பெண் குழந்தைகளை உங்களால் பார்க்க முடியும். பெண்களின் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் இந்த நாளில் கூட, உடற்பயிற்சி கூடங்களைத் (Gym) தவிர வேறு இடங்களில் பெண் குழந்தைகள் விளையாடுவதை உங்களால் பார்க்க முடியுமா?

உடற்பயிற்சி கூடங்களில் பெண்களும் பயிற்சி மேற்கொள்வதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை பேரால் கட்டணம் செலுத்தி இந்த வசதியைப் பெற முடியும். தமிழ் இலக்கியங்களில் பெண்கள் பல்வேறு விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்ததற்கான குறிப்புகள் உள்ளன.

  1. புனல் விளையாட்டு (நீர்விளையாட்டு)
  2. வட்டாடுதல்
  3. பந்தாடுதல்
  4. கழங்காடுதல்
  5. ஊசலாட்டம்
  6. ஓரையாடல்
  7. வண்டலிழைத்தல்

போன்ற விளையாட்டுக்களை உடல் உறுதிக்காகவும், மனநலனுக்காகவும் விளையாடியதாக சங்ககாலப் பாடல்களில் குறிப்புகள் உள்ளன. இவை அனைத்துமே அனைத்து தரப்பு பெண்களாலும் விளையாடப்பட்டவை. ஆனால் இன்று பெண்களும், பெண் குழந்தைகளும் விளையாடுவதை எங்கேனும் பார்க்க முடியுமா? சமூகம் முன்னேறியதாகக் கூறினாலும், நமக்கு முந்தைய தலைமுறையில் இருந்த விளையாட்டுக்கள் கூட, இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு கிடைப்பது இல்லை.

பந்து விளையாடும் பெண் குழந்தைகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

பெண் குழந்தைகளுக்கான விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் ஈடிவி பாரத் நிருபரிடம் பேசுகையில், "கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் பொதுவாகவே அங்கு இருக்கக்கூடிய மைதானங்கள், பூங்காக்கள் அனைத்திலும் 99.9 சதவீதம் ஆண் குழந்தைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. பெண் குழந்தைகள் விளையாடுவதற்கு இடங்கள் கிடைப்பதில்லை" என்றார்.

இந்தியாவில் 50 சதவீதம் பெண்கள் ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் இருக்கின்றனர் என்ற புள்ளி விவரத்தைக் குறிப்பிட்ட அவர், சரிவிகித உணவு மற்றும் உடற்பயிற்சி எடுத்துக்கொள்ளாத தாய்க்கு பிறக்கும் குழந்தைகளும் குறைபாட்டுடனேயே இருக்கின்றன என்றார்.

கோ-கோ விளையாடும் பெண் குழந்தைகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

விளையாட்டில் பெண் குழந்தைகளின் பங்கு: கடந்த 15 ஆண்டுகளாக பெண் குழந்தைகள் விளையாட்டில் பங்குபெறுவது குறைந்துகொண்டே வருகிறது. ஆண் குழந்தைகளாவது பள்ளிகளில் அல்லது மைதானங்களில் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுகின்றனர். ஆனால், பெண் குழந்தைகள் அவ்வாறு இருப்பதில்லை. பெண் உடற்கல்வி ஆசிரியர்களும் மிக மிக குறைவான எண்ணிக்கையில் உள்ளனர் என்ற தேவநேயன் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களும் குழந்தைகளும் தான் என்றார்.

வளரிளம் பெண் குழந்தைகளுக்கான பிரச்சனை: ஸ்மார்ட் செல்போன்கள் வளரிளம் பருவத்தில் இருக்கக்கூடிய ஆண் மாற்றும் பெண் குழந்தைகளிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக வளரிளம் பருவ பெண் குழந்தைகளின் உடல் பிரச்னைகள், தற்கொலைகள், இளம் வயதிலேயே கர்ப்பம் ஆகுதல் போன்ற நிகழ்வுகள் அதிகரித்துள்ளது என குறிப்பிட்ட தேவநேயன் இது அனைத்தையும் விளையாட்டோடு தொடர்புபடுத்தியே தான் பார்ப்பதாக கூறினார்.

கபடி விளையாடும் பெண் குழந்தைகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

பெண் குழந்தைகளின் முழுமையான பாதுகாப்பு என்பது அவர்களின் உடல் வளர்ச்சிக்கு விளையாட்டை ஏற்படுத்தி கொடுப்பதுதான் அடிப்படையான ஒன்று. இதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் கொடுக்காததால் தான் பெண் குழந்தைகள் விளையாட முடியாமல் இருக்கின்றனர் என குற்றம் சாட்டினார் தேவநேயன்.

பெண்கள் விளையாட்டு மைதானம்: LANCET வெளியிட்டுள்ள அறிக்கையில், 57 சதவீதம் பெண்கள் உடல் ரீதியான செயல்பாடு இல்லாமல் இருக்கிறார்கள் என்பது வருத்தத்தை அளிக்கிறது. பெற்றோர் தங்களது நேரத்தை ஒதுக்கி பெண் குழந்தைகளை தினமும் 2 மணி நேரம் கட்டாயம் விளையாட வைக்க வேண்டும். தமிழக அரசு எல்லா இடங்களிலும் பெண் குழந்தைகள் விளையாடுவதற்கான இடங்களையும் பாதுகாப்பான சூழலையும் உருவாக்கித்தர வேண்டும் எனவும் தேவநேயன் வலியுறுத்தினார்.

பெண் குழந்தைகளின் கருத்தை அறிவதற்காக சென்னையை அடுத்த செம்மஞ்சேரிக்கு நமது செய்தியாளர் குழு சென்றது. நகர்ப்புறங்களில் ஆக்கிரமிப்பு அகற்றம் போன்ற நடவடிக்கைகளால் அப்புறப்படுத்தப்படும் மக்கள் குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் இங்குதான் வசிக்கின்றனர்.

பெண் குழந்தைகளின் கோரிக்கை: தங்கள் பிரச்சனைகளை ஈடிவி பாத்துடன் ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்ட அவர்கள், "எங்களுக்கு விளையாடுவதற்கு போதுமான இடங்கள் இல்லை. நாங்கள் கபடி, கோ-கோ, சிலம்பம் போன்ற விளையாட்டுகளை விளையாடுவோம். இந்த இடத்தில் கபடி விளையாடும் போது, கோ-கோ விளையாட முடியாது. மிகவும் நெரிசலாக இருக்கும். பக்கத்தில் இருக்கும் மைதானத்தில் விளையாடச் சென்றால், அங்கு ஆண்கள் விளையாட விட மாட்டார்கள். எனவே, எங்களுக்கு விளையாட தனியாக மைதானம் வேண்டும்.

பொது மைதானங்களில் நாங்கள் விளையாடினாலும் சில பேர் எங்களை தவறான முறையில் பார்க்கிறார்கள். அது எங்களுக்கு அசௌகரியமாக உள்ளது. வீட்டில் விளையாடுவதற்கு எங்களை அனுமதிக்க மாட்டார்கள். அப்படியே அனுமதித்தாலும் இந்த பிரச்னைகள் எல்லாம் உள்ளது. எனவே, எங்களுக்கு தனியாக விளையாடுவதற்கு மைதானம் வேண்டும்" என்றும் குழந்தைகள் கூறினர்.

விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமிக்கும் ஆண்கள்: பெண் குழந்தைகளின் விளையாட்டு முக்கியத்துவம் குறித்து சென்னை YMCA உடற்கல்வி கல்லூரியின் முதல்வர் ஜான்சன் பிரேம்குமார் பேசுகையில், "பெண் குழந்தைகள் விளையாடுவதனால் அவர்கள் உடல் வலிமையையும், மனவலிமையையும் பெறுகிறார்கள். உடலை வருத்தி உடற்பயிற்சி செய்யும் போது மனவலிமை தானே அதிகரிக்கும் என்றார் ஜான்சன். LANCET அறிக்கையில் சொன்னது போல, 57 சதவீதம் பெண்கள் வீட்டில் இருக்கின்றனர், 23 மற்றும் 25 வயதில் திருமணம் செய்து வைக்கிறார்கள். இதற்கு தீர்வு சமுதாயத்தில் பெற்றோர், பெண் குழந்தைகளை தைரியமாக வெளியே விட வேண்டும்.

நகரத்தில் இருக்கக்கூடிய மக்கள் பெரும்பாலும் வீட்டினுள்ளேயே இருக்கிறார்கள், வெளியில் விளையாடுவது போன்ற செயல்கள் தற்போது பெரிதும் குறைந்துள்ளது, இந்த பொது சூழலில் பெற்றோர் தானாக உணர வேண்டும். குழந்தைகளை விளையாட்டிற்கு ஊக்குவிக்க வேண்டும்" என்றார்.

பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு உணவு, உடையைப் போன்று உடற்பயிற்சியையும் கட்டாயமாகக் கருதி ஆண் பெண் பேதமின்றி வழங்க வேண்டும். வாழ்வியல் சார்ந்த நோய்கள் (Life Style Desease) அதிகரித்து வரும் சூழலில் எதிர்கால சந்ததியைக் காக்க விளையாட்டு ஒன்றே தீர்வு என்பதையும் பெற்றோர் உணர வேண்டும்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:குழந்தைகள் முதல் பெரியவர்களின் பாராட்டுகளை பெறும் 'கிண்டி சிறுவர் பூங்கா'..அப்படி என்ன ஸ்பெஷல்?

ABOUT THE AUTHOR

...view details