கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உட்பட 63 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு பத்து லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி மற்றும் இருப்பிடத்துக்கான பொறுப்பை அரசு ஏற்றுள்ளது.
அத்துடன், இந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டு, மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மதுவிலக்கை கவனித்து வந்த ஏ.டி.ஜி.பி. கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்களும் உயிரிழந்துள்ளதால் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் குஷ்பூ தலைமையிலான 3 பேர் கொண்ட குழு இன்று நேரில் சென்று விசாரித்தது. அப்போது, அங்குள்ள பெண்களுக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது, எதனால் குடித்தீர்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி ஆய்வு மேற்கொண்டனர்.