சென்னை: தமிழ்நாட்டின் ஆளுநரும், தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி, உதகமண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (மே 28) நடைபெற்ற தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களின் இரண்டு நாள் மாநாட்டின் நிறைவு அமர்வுக்கு தலைமை தாங்கினார்.
இந்த மாநாட்டில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "நாட்டில் தங்களுக்குள்ள ஏராளமான வாய்ப்புகளைப் பற்றி நம் மாணவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு வழிகாட்டுதல் தேவை. திறமையான மாணவர்களான நமது முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட எந்த ஒரு ஆய்வு உதவித்தொகையின்றியும் அல்லது மாதத்துக்கு சுமார் ரூ.5,000 என்ற சொற்பத் தொகையைப் பெறுவதும் கவலைக்குரிய விஷயம்.
போதுமான வழிகாட்டுதல் மற்றும் உந்துதல் இல்லாததால், பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) நடத்தும் என்இடி - ஜேஆர்எஃப் ஃபெலோஷிப் மூலம் அவர்களால் மாதத்துக்கு சுமார் ரூ.40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் பெற முடியவில்லை. இத்தொகை கெளரவ விரிவுரையாளர்கள் வாங்கும் ஊதியத்தை விட கிட்டத்தட்ட இரட்டிப்பானதாகும்.
நமது மாநிலத்தில் உள்ள சில தனியார் பல்கலைக்கழகங்கள் இந்த விஷயத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் இந்தப் பிரச்சினையை தீவிரமாகக் கவனத்தில் கொண்டு, இதுபோன்ற தனியார் பல்கலைக்கழகங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்" என ஆளுநர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பி.ஏ., எம்.ஏ வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்திட்டங்களில் நிலவும் ஏற்றுக் கொள்ள முடியாத சிதைவுகள். மாநில பல்கலைக்கழகங்களின் படிப்புகள், பாடத்திட்டத்தில் தேசிய சுதந்திர இயக்கம் மொத்தமாக இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்லாயிரம் இளைஞர்கள் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்களுடன் போரிட்டனர். பலர் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். தேவகோட்டை, பெருங்காமநல்லூரில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் படுகொலை செய்யப்பட்டதை மறக்க முடியாது.
பாளையங்கோட்டையில் பாளையக்காரர்களின் எதிர்ப்பு மற்றும் மக்கள் எழுச்சிகள் மற்றும் அவற்றில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர்" என்று ஆளுநர் குறிப்பிட்டு, அதில் ஒரு சில நிகழ்வுகளை மேற்கோள்காட்டினார்.
மகாத்மா காந்தி 16 முறைக்கு மேல் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். அவர் முன்னெடுத்த சுதேசி இயக்கம், உப்புச் சத்தியாகிரகம் போன்றவை தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றன. மேலும், தமிழ்நாட்டு மக்கள் அவற்றில் முக்கிய பங்கு வகித்தனர். ஆங்கிலேயர்கள் வங்காளத்தை வகுப்பு ரீதியாகப் பிரித்தபோது, தமிழ்நாட்டில் ஒரு பெரிய எழுச்சி ஏற்பட்டது. அதுவே சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரான வ.உ.சிதம்பரம் பிள்ளை தேசிய சுதந்திர இயக்கத்தில் சேரத் தூண்டியது.