சென்னை:சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச் சாவடிகளான பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில், சுங்கக்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (National Highways Authority of India) வெளியிட்டுள்ளது. அதன்படி, கட்டண உயர்வு வரும் மாதம் ஏப்.1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
மத்திய அரசின் கீழ் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பரனூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம், ரூ.45 முதல் ரூ.200 வரையும், உள்ளூர் தனியார் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம், 10 ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல, ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.60 முதல் ரூ.190 வரையும், உள்ளூர் தனியார் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் 10 ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:“பாஜகவும் அதிமுகவும் மக்களைச் சீரழித்து வருகின்றனர்” - குமரி அதிமுக வேட்பாளர் பேச்சால் பரபரப்பு! - ADMK Candidate Criticized ADMK