தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒட்டுமொத்த நெசவாளர்களுக்கு கிடைத்த விருது.. தேசிய விருது பெறும் திண்டுக்கல் நெசவாளர் பகிர்ந்த சுவாரஸ்யங்கள்! - national handloom award 2023

National Handloom Award: தேசிய கைத்தறி நெசவு விருது அறிவிக்கப்பட்ட திண்டுக்கல் பாலகிருஷ்ணன், தான் நெசவு செய்த சேலையின் டிசைன் மற்றும் சிறப்பம்சம் பற்றியும், விருது அறிவிக்கப்பட்டது பற்றியும் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற பாலகிருஷ்ணன்
தேசிய விருது பெற்ற பாலகிருஷ்ணன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 28, 2024, 6:29 PM IST

Updated : Jul 28, 2024, 6:45 PM IST

திண்டுக்கல்: வீட்டில் இருக்கும் பெண்கள் முதல் வேலைக்கு செல்லும் பெண்கள் வரை சுடிதார் போன்ற உடைகளை அணிவதே செளகரியமாக இருக்கிறது என்கின்றனர் பெரும்பாலான பெண்கள். ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதமான ஆடைகள் அணியப்படுகின்றன. அவை, அந்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. அவ்வாறு இந்தியாவின் கலாச்சாரமாக புடவை தான் உள்ளது.

நெசவாளர்கள் அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அதிலும், தமிழ்நாட்டுப் பெண்கள் என்றாலே முதலில் நம் அனைவரின் நினைவுக்கு வருவது புடவை தான். புடவைகளில் பல வகைகள் உள்ளன. இதில், காட்டன் புடவைகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் ஏராளமான காட்டன் புடவை வகைகள் உள்ளன.

காட்டன் புடவைகள் தான் வெயில் காலத்தில் கட்டுவதற்கு செளகரியமாக இருப்பதாக பெண்கள் தெரிவிக்கின்றனர். இந்த காட்டன் புடவைகளும் நவீன காலத்துக்கு தகுந்தாற்போல் அவற்றின் நிறங்களிலும், டிசைன்களிலும் மாற்றம் ஏற்பட்டு விட்டன. இந்த காட்டன் புடவைகளில் அதிகமானவை கைத்தறி காட்டன் புடவைகள் தான்.

கைத்தறி புடவைகளின் விலைகள் சற்று அதிகமாக இருந்தாலும், பெண்கள் தங்களை எலகன்டாக காண்பிப்பதற்கு அதையே தேர்வு செய்கின்றனர். இந்த கைத்தறி புடவைகள் தூய பருத்தி நூல்களின் மூலமாகவே நெய்யப்படுகின்றன.

நெசவாளர்கள் நூல்களை முதலில் சாயம் முக்கி அதனை காய வைக்கின்றனர். பின்பு நூலுக்கு வலுசேர்க்கும் விதமாக அதன் மீது பசையைத் தடவி நூலுக்கு மெருகேற்றுகின்றனர். மெருகேற்றப்பட்ட நூலானது தறிக்கு கொண்டு சென்று ராட்டு மூலம் நூற்றல் நடைபெறுகிறது. அதன் பின்னர் தான் நூலானது சேலையாக நெய்யப்படுகிறது.

இவ்வாறு கஷ்டப்பட்டு நெய்யும் நெசவாளர்களை கெளரவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் தேசிய கைத்தறி விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் இவ்விருதுக்கு நாடு முழுவதும் 429 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 14 பேருக்கு இவ்விருது வழங்கப்பட இருக்கின்றது. அதில், தமிழ்நாட்டில் இருந்து 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல்லில் இருந்து பாலகிருஷ்ணன் என்பவரும், காஞ்சிபுரத்தில் இருந்து பால சுப்பிரமணியன் என்பவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் தேசிய கைத்தறி தின விழாவில் மத்திய அரசால் "தேசிய கைத்தறி நெசவாளர் விருது 2023" வாங்க இருக்கின்றனர்.

யார் இந்த பாலகிருஷ்ணன்? தமிழ்நாடு கைத்தறி துறையின் கீழ் செயல்படும் ஸ்ரீ கற்பக விநாயகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக கூலிக்கு காட்டன் சேலைகளை நெசவு செய்து வருகிறார். இந்நிலையில், பாலகிருஷ்ணன் தான் நெசவு செய்த யானை, மயில், அன்னம், ருத்ராட்சம், மாங்காய் டிசைன் போன்ற சேலைகளை இந்திய தேசிய கைத்தறி தேர்வு ஆணையத்திற்கு ஸ்ரீ கற்பக விநாயகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் மூலம் அனுப்பி உள்ளார்.

இவர் அனுப்பிய இந்த காட்டன் சேலைகள் தான் இவருக்கு தேசிய கைத்தறி விருதினை பெற்று தந்துள்ளது. இதுகுறித்து பாலகிருஷ்ணன் நம்மிடம் கூறியதாவது,"ஸ்ரீ கற்பக விநாயகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் நான் உறுப்பினராக உள்ளேன். கூட்டுறவு சங்கம் நூல்களை எங்களுக்குத் தருவார்கள். நாங்கள் அதை நெய்து சேலையாக கொடுப்போம்.

மத்திய அரசு தேசிய விருதினை அறிவித்துள்ளது. அதற்கு நெசவாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 6 விதமான டிசைன்கள் இதில் அடங்கி உள்ளது. டிசைன்களுக்கு விருது கிடைத்தது பெருமையாக உள்ளது. இந்த விருது எங்கள் நெசவாளர்களுக்கு கிடைத்த விருதாக தான் நான் பார்க்கிறேன். கைத்தறி புடவைகளை விடக்கூடாது என்பதே எங்கள் சங்கம் மற்றும் என்னுடைய எண்ணமாகும்" என்றார்.

இதுகுறித்து கூட்டுறவு சங்கம் மேலாளர் அருண் குமார் கூறுகையில், "பாலகிருஷ்ணன் நெய்த சேலைக்கு மத்திய அரசு விருது வழங்கி உள்ளது பெருமையாக இருக்கிறது. இந்த சேலைகள் தூய பருத்தியால் நெய்யப்பட்டதாகும். புது விதமான கிரியேட்டிவ் டிசைன்களைக் கொண்டு நெய்யப்பட்டதே இந்த சேலையின் சிறப்பம்சமாகும். விருது கிடைக்க காரணமாக இருந்த மாநில, மத்திய அரசுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:கொலை நடக்காத நாளே தமிழகத்தில் கிடையாது.. ஈபிஎஸ் கடும் விமர்சனம்! - Edappadi Palaniswami

Last Updated : Jul 28, 2024, 6:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details