சென்னை: நாட்டில் 18வது மக்களவைத் தேர்தல் திருவிழா முடிவுபெறும் தருவாயில் உள்ளது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இதனையடுத்து, வருகிற ஜூன் 1ஆம் தேதி 7வது கட்ட வாக்குப்பதிவும், அதனைத் தொடர்ந்து ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், நாளை மறுநாள் (மே 30), பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வருகிற மே 30 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்காக வெளியிடப்பட்டுள்ள தற்காலிக பயண அட்டவணையின்படி, மே 30 மாலை 03.55 மணிக்கு கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து எம்-17 என்ற ராணுவ ஹெலிகாப்டரில் புறப்படும் மோடி, 04.35 மணிக்கு கன்னியாகுமரி ஹெலிபேட் தளத்திற்கு வருவார்.
இதனையடுத்து, மே 31 அன்று தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதனைத் தொடர்ந்து, ஜூன் 1ஆம் தேதி மாலை 03.25 மணிக்கு கன்னியாகுமரி ஹெலிபேட் தளத்தில் இருந்து எம்-17 ராணுவ ஹெலிகாப்டரில் புறப்படும் மோடி, 04.05 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றடைவார்.
தொடர்ந்து, 04.10 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து IAF விமானம் மூலம் புறப்படும் பிரதமர் மோடி, இரவு 07.30 மணிக்கு டெல்லி விமான நிலையம் வந்தடைவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கன்னியாகுமரிக்கு வரும் மோடி, அங்கு உள்ள விவேகானந்தர் நினைவு பாறைக்குச் சென்று தியானத்தில் ஈடுபட உள்ளார்.
முன்னதாக, கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போதும், மே 18ஆம் தேதி கேதார்நாத் குகைக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல், ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் 7-ம் கட்ட வாக்குப்பதிவின் போது மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதையும் படிங்க:3 நாட்கள் தியானம் செய்ய கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! - PM Modi Visits Kanyakumari