செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், பொன்மார் ஊராட்சி மலைத் தெருவில் வசித்து வந்தவர் விமல் ராஜ். இவர் அங்குள்ள கிறிஸ்தவ சபையில் மத போதகராக இருந்தார். இவருக்கும், மும்பையில் வசித்து வந்த வைஷாலி என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் ஆகி நான்கு வருடம் ஆன நிலையில், இருவருக்கும் 11 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி மாலை 4 மணியளவில் வைஷாலிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்து விட்டதாக விமல் ராஜ் கூறியுள்ளார்.
பின்னர், வைஷாலியின் பெற்றோர் உடனடியாக வீட்டிற்கு வந்து பார்க்கும்போது, வைஷாலியின் உடலில் மர்மமான காயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தாழம்பூர் காவல் நிலையத்தில் வைஷாலியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விமல்ராஜிடம் மேற்கொண்ட கிடிக்குப்பிடி விசாரணையில், வைஷாலியை துணியால் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கடந்த மாதமே இந்த கொலை தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை உயிரிழந்த வைஷாலியின் அண்ணன் எழுப்பி இருந்தார். மதபோதகர் விமல் ராஜ் மது போதைக்கு அடிமையானவர் என்றும், அவர் பல பெண்களுடன் தகாத உறவிலிருந்தார் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், அவர் போதை மாத்திரை கடத்தல் போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாக சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில், பொன்மாரில் உள்ள மத போதகர் விமல்ராஜ் வீட்டில் தாழம்பூர் போலீசார் நடத்திய சோதனையில், விமல் ராஜ் வீட்டிலிருந்து சில மர்ம பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதைத் திறந்து பார்த்தபோது, அங்கிருந்த மூன்று அட்டைப் பெட்டிகளில் 3,000க்கும் மேற்பட்ட வலி நிவாரணி போதை மாத்திரைகள் இருந்துள்ளது. மேலும், இந்த மாத்திரைகள் அனைத்தும் மும்பை முகவரி கொண்ட ஒரு இடத்திலிருந்து வந்திருப்பதாகவும், இதை கொரியர் மூலம் அனுப்பி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் போதை மாத்திரைகள் அடங்கிய பெட்டிகளைக் கைப்பற்றியுள்ள போலீசார், முதல் கட்டமாக மைக்கேல் என்பவருக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். மைக்கேலும், விமல்ராஜூம் கூட்டாக சேர்ந்து மும்பைக்குச் சென்று, பெட்டி பெட்டியாக மாத்திரைகளை வாங்கி வந்து விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இவர்களுக்கு வேறு யாருடனாவது தொடர்புள்ளாதா என்ற கோனத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:போதைப்பொருளுடன் இளைஞர்கள்.. புகாரளித்த குடியிருப்புவாசிகளுக்கு கொலை மிரட்டல் - சிங்காநல்லூரில் நடப்பது என்ன?