தமிழ்நாடு

tamil nadu

"படிப்ப மட்டும் எடுத்துக்க முடியாது" - பிளஸ் 2 தேர்வில் அசத்திய நாங்குநேரி சின்னத்துரை! - nanguneri student chinnadurai

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 6, 2024, 5:38 PM IST

Updated : May 6, 2024, 6:01 PM IST

TN Results: நாங்குநேரியில் கடந்த ஆண்டு சக மாணவர்களால் வெட்டப்பட்ட சின்னத்துரை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

நாங்குநேரி சின்னத்துரையும் தாய் மற்றும் சகோதரியுடன் உள்ள புகைப்படம்
நாங்குநேரி சின்னத்துரையும் தாய் மற்றும் சகோதரியுடன் உள்ள புகைப்படம் (Credit: ETV Bharat Tamilnadu)

நாங்குநேரி சின்னத்துரையின் பேட்டி (Credit: ETV Bharat Tamilnadu)

திருநெல்வேலி: "எனக்கு என்ன தெரியுதோ, நான் என்ன சொல்லுதனோ அத மட்டும் எழுதுங்க. உங்களுக்கு பதில் தெரிஞ்சா நீங்களே எழுதிடாதீங்க" இப்படித்தான் 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது, தனக்காக தேர்வு எழுதுவதற்கு வந்த நபரிடம் கூறியிருக்கிறார் சின்னத்துரை. கடந்த ஆகஸ்ட் மாதம் சக மாணவர்களின் சாதி வெறி தாக்குதலுக்கு ஆளான சின்னதுரை, அந்த தாக்குதல் ஏற்படுத்திய காயங்களிலிருந்து மெதுவாக மீண்டு வருகிறார்.

வலது கையில் தோள்பட்டையில் வெட்டுக்காயங்கள் ஆறியிருக்கின்றன ஆனாலும் பேனா பிடித்து எழுதும் அளவுக்கு தேறவில்லை. இடது கையில் முழங்கைக்கு கீழே வெட்டுக்காயங்களின் தாக்கத்தால் கையை முழுமையாக தன்னிச்சையாக இயக்க முடியவில்லை. மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை, பயிற்சி மற்றும் புத்துணர்வின் வழியாக சீக்கிரமே தான் முழுமையாக குணமடைவேன் என நம்பிக்கை தெரிவிக்கிறார் சின்னதுரை.

12ம் வகுப்பு படித்து வரும் சின்னதுரையின் வாழ்வில் மறக்க முடியாத நாளாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி அமைந்தது. வள்ளியூர் அரசு உதவி பெறும் பள்ளியில், 12ம் வகுப்பு படித்து வந்த இவரை, வீடு தேடி வந்த சக மாணவர்கள் அரிவாளால் தாக்கினர். அதை தடுக்க சென்ற அவரது தங்கை சந்திரா செல்வியையும் அரிவாளால் தாக்கினர். சின்னதுரையை சாதி ரீதியான விரோதத்துடன் தாக்கியதாக கைதான மாணவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக, பாளையங்கோட்டையில் உள்ள பள்ளிக்கு மாற்றப்பட்டார் சின்னத்துரை. அவரது குடும்பமும் அரசு உதவியுடன் பாளையங்கோட்டைக்கு மாறிய நிலையில் அங்கே தனது படிப்பைத் தொடர்ந்தார். மருத்துவமனையிலிருந்தே காலாண்டுத் தேர்வை எழுதிய சின்னதுரை, சிகிச்சை ஒருபக்கம் நடந்தாலும் தேர்வுக்கும் தயாராகி வந்தார்.

தானாக தேர்வு எழுத முடியாததால் ஸ்கிரைபர் எனப்படும் உதவியாளர் மூலம் தேர்வெழுதிய சின்னதுரை, தேர்வில் 469 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். இது குறித்து ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய சின்னத்துரை "தற்போது பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது ஆசிரியர்கள் நேரில் வந்து எனக்கு பாடம் எடுத்தனர். அதனால் தான் என்னால் அதிக மதிப்பெண் எடுக்க முடிந்தது.

தற்போது படித்த பள்ளியில் சாதி பிரச்சனை இல்லை. இனிவரும் காலங்களில் மாணவர்களிடையே சாதி பிரச்சனைகள் இருக்கக் கூடாது. நான் பி.காம்(B.Com) படிக்க உள்ளேன்" எனத் தெரிவித்தார். தொடர்ந்து சின்னத்துரையின் தங்கை சந்திரா செல்வி கூறுகையில், "அண்ணன் அதிக மதிப்பெண் எடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது. மருத்துவர்கள் சிகிச்சை காரணமாக பாதிப்பிலிருந்து தற்போது மீண்டு வந்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

நாங்குநேரி சின்னத்துரையின் மதிப்பெண் விவரங்கள் (Photo Credit: ETV Bharat Tamilnadu)

சின்னதுரையின் குடும்பம் வசிப்பதற்காக தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் புதிய வீடு ஒதுக்கியுள்ளது. அவரது உயர்கல்விக்கான செலவையும் அரசே ஏற்றுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 01.03.2024 முதல் 22.03.2024 வரை பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 6) வெளியாகின. மொத்தமாக 7,60,606 மாணவ மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுதினர். இதில் 4,08,440 பேர் மாணவியர்கள், 3,52,165 பேர் மாணவர்கள், ஒருவர் மட்டும் மூன்றாம் பாலினத்தவர் ஆவார்.

தேர்ச்சி விவரங்கள்: இன்று வெளியான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் படி 7,19,196 மாணவ மாணவியர்கள் என மொத்தம் 94.56% தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில், மாணவியர்கள் 3,93,890 பேர் என 96.44% மற்றும் மாணவர்கள் 3,25,305 பேர் என 92.37% தேர்ச்சியடைந்துள்ளனர். பொதுத்தேர்வு எழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் (100%) தேர்ச்சி அடைந்துள்ளார். இம்முடிவுகளின் படி, மாணவர்களை விட 4.07 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க:சின்னத்துரைக்கு என்ன நடந்தது? தாய் அம்பிகாவதி கண்ணீர் மல்க பேட்டி !

Last Updated : May 6, 2024, 6:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details