திருநெல்வேலி: நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. விரைவில் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் சுழல் ஏற்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
குறிப்பாக தமிழகத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது சீட் வாங்கி விட வேண்டும் என்ற முனைப்போடு கட்சித் தலைமைக்கு பல்வேறு வழியில் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். எனவே தமிழகம் முழுவதும் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அந்த வகையில் பல்வேறு பாரம்பரியங்களை கொண்ட திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக போன்ற முக்கிய கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதில் அரசியல் கட்சியினரிடைய பெரும் விவாதமே ஏற்பட்டு வருகிறது.
அதேபோல் அரசியல் விமர்சகர்களும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து பல்வேறு கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். பாஜகவை பொறுத்தவரை அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவரும் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடப் போவதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் நயினார் நாகேந்திரன் நாடாளுமன்ற தேர்தலில் சீட் வாங்கி எப்படியாவது எம்பி ஆகி விட வேண்டும் என்ற முனைப்போடு கடந்த ஓராண்டுக்கு முன்பே காய் நகர்த்தி வருகிறார். குறிப்பாக ஒரு ஆண்டுகளுக்கு முன்பு இது தொடர்பான தனது விருப்பத்தை செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் வெளிப்படுத்தி இருந்தார்.
எனவே திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடப் போவது நயினார் நாகேந்திரன் தான் என கிட்டத்தட்ட உறுதியாகி வரும் அதே நேரத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவரான சரத்குமார் பாஜக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடலாம் என்ற செய்தியும் பரவி வருகின்றது.
சமீபத்தில் திருநெல்வேலியில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய சரத்குமார் பிரதமர் நரேந்திர மோடியை பெரிதும் புகழ்ந்து பேசினார். எனவே தேர்தலில் அவர் பாஜக உடன் கூட்டணி அமைக்கலாம் என்றும், அவருக்கு திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதே சமயம் சரத்குமாருக்கு வாய்ப்பளித்தால் சமுதாய ரீதியாக கட்சி செயல்படுவதாக அப்பட்டமாக பேசப்படும் எனக் கருதி பாஜக தலைமை அதை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பே நயினார் நாகேந்திரன் சீட் கேட்டு கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாலும் மாவட்ட முழுவதும் நன்கு அறிமுகமான நபர் என்பதாலும் நயினார் நாகேந்திரனுக்கு சீட்டு வழங்குவதில் எந்த தடையும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் இதுவரையில் நயினார் நாகேந்திரனுக்கு சீட் வழங்குவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இது போன்ற சூழ்நிலையில் இன்று (பிப்.16) நயினார் நாகேந்திரன் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லியில் அவர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் அமைச்சர் அமித் ஷா உள்பட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் சீட் வாங்குவதற்காகவே அவர் டெல்லிக்கு சென்று இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து நயினார் நாகேந்திரனை ஈடிவி பாரத் சார்பில் பிரத்யேகமாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, "சட்டமன்றத்தை முடித்துவிட்டு அவசரமாக டெல்லி வந்துள்ளேன். கட்சி விவகாரம் தொடர்பாக வந்துள்ளேன். தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வீல்சேர் தட்டுப்பாட்டால் விபரீதம்: ஏர் இந்தியா பயணி பரிதாபமாக உயிரிழப்பு! விமான நிலையத்தில் எதிரொலிக்கும் வீல்சேர் பற்றாக்குறை?