சென்னை:நாகை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் (67) உடல் நலக்குறைவால் சென்னையில் மியாட் மருத்துவமனையில் காலமானார்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கப்பலுடையான் என்ற கிராமத்தில் 1957ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி எம்.செல்வராஜ் பிறந்தார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து தனது கடின உழைப்பின் மூலம் மாவட்ட செயலாளராக முன்னேறினார்.
பின்னர், 1989 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1996, 1998 நடத்தப்பட்ட மக்களவை தேர்தல்களில் நாகை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 6 முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றுள்ளார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார். 2019-இல் மீண்டும் நாகை தொகுதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வராஜ் கரோனா காலகட்டத்தில் கரோனா தொற்று ஏற்பட்டு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் சிறுநீரக பிரச்சனை, மூச்சுத்திணறல் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்வராஜ் இன்று காலமானார். அதிகாலை இரண்டு மணி அளவில் உயிர் பிரிந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் நாகப்பட்டினத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நாகை எம்பி செல்வராஜ் மருத்துவமனையில் அனுமதி; உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்!