கோயம்புத்தூர்: கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் அசோக் ஸ்ரீநிதி சார்பில் பாமகவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில், "கோவையில் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மைவி3 நிறுவனம் (MyV3 Ads) விளம்பரங்களைப் பார்த்து மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும் என்று ஆசை காட்டி வருகிறது.
மேலும், அதை நம்பி உறுப்பினர்களாக சேர்ந்தவர்களிடம் இருந்து தற்போதுவரை சுமார் 2,000 கோடி ரூபாயை சம்பந்தப்பட்ட மைவி3 நிறுவனம் வசூல் செய்துள்ளது. கடந்த ஆண்டு மைவி3 மோசடிக்கு எதிராக புகார் கொடுத்தேன். ஆகவே, இந்த நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட மக்களுக்கு அவர்கள் செலுத்திய பணம் கிடைக்க வேண்டி, அந்த நிறுவனத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், கோவை மாவட்ட பாமக செயலாளர் அசோக் ஸ்ரீநிதி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த மாதம் 27ஆம் தேதி அசோக் ஸ்ரீநிதியின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், மைவி3 நிறுவனத்திற்கு எதிராக இனியும் செயல்பட்டால் உயிருடன் இருக்க முடியாது என்றும் அசோக் ஸ்ரீநிதியை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.