திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் பகுதியில் ரவி என்பவருடைய நிலத்தில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மர்ம பொருள் ஒன்று விழுந்து, சுமார் ஐந்து அடி ஆழ பள்ளம் உருவாகியுள்ளது. இதனை அதே பகுதியைச் சேர்ந்த திருமலை என்பவர் பார்த்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்குச் சென்று பள்ளத்தை பார்த்தபோது, பள்ளத்திலிருந்து அதிக வெப்ப அனல் வெளியானதாக கூறப்படுகிறது. இந்த மர்ம பொருள் குறித்து அப்பகுதி மக்கள் மத்தியில் தகவல் பரவியதை அடுத்து, சம்பவ இடத்தில் பொதுமக்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இதனிடையே, இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் மற்றும் ஜோலார்பேட்டை போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார், அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், விழுந்த மர்ம பொருள் என்னவென்று கண்டறிய வேண்டும் என அறிவியல் மையத்திற்கு பரிந்துரை செய்தார். அதன் பின்னர், சென்னையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் செயல் இயக்குநர் லெனின் தமிழ் கோவன், வேலூரில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்திற்கு ஆய்வு மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.