திருச்சி:திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் 'அண்ணனுடன் ஆயிரம் பேர்' சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கேரளா மருத்துவ கழிவு:
அப்போது அவர் கூறுகையில், ''15, 20 ஆண்டுகளாக கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து நாம் கட்சியை சார்ந்தவர்கள் தடுத்து வருகின்றனர். இவ்வளவு சோதனை சாவடியை தாண்டி இந்த கழிவுகள் எப்படி வருகிறது. என்னுடைய வளங்களை வெட்டி எடுத்து அவர்களின் குப்பைகளை கொட்டுகின்றனர். நீ 'கடவுளின் தேசம்' (கேரளா) என்றால் நாங்க கண்றாவி தேசமா?'' என சீமான் கேள்வி எழுப்பினார்.
இஸ்லாமியர்கள் வாக்களிக்கவில்லை
தொடர்ந்து பேசிய சீமான், இஸ்லாமியர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கவில்லை. ஆனாலும் அவர்களின் நலனுக்காக போராடி வருகிறேன். திமுகவின் சாதனைகளை போர் பரணி பாட வேண்டும் என செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், திமுக பாட இருக்கும் போர் பரணியை கேட்க நானும் ஆவலாக உள்ளேன்.
ஒரு பக்கம் ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் என போராட்டம், மற்றொரு பக்கம் சட்ட ஒழுங்கு பிரச்சனை நிறைந்து காணப்படும் இந்த சமூகத்தில் அவர்கள் என்ன போர் பரணி பாட இருக்கிறார்கள் என்பதை கேட்க இருக்கிறேன். இதுவரை இருந்த முதல்வர்களில் மிக மோசமான முதல்வர் ஸ்டாலின் தான்.
கூட்டணியை விரும்புவோருக்கு எதற்கு தனி கட்சி
எட்டு வழி சாலை, பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இதன் காரணமாக தான் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. நாங்கள் எந்த கூட்டணியிலும் சேராமல் தனித்து நின்று போராடுகிறோம். கூட்டணியை விரும்புபவர்கள் எதற்காக தனித்தனியாக கட்சி ஆரம்பிக்க வேண்டும்.