திருநெல்வேலி: தாழையூத்து அடுத்த கீழ தென்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(50), கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். இவரது தாய் பகவதி(75) கிருஷ்ணன் வீட்டுக்கு அருகே தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். மேலும், கிருஷ்ணனின் தங்கை மாலாவும் கணவரைப் பிரிந்து தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.
அதனால், தனது குடும்பம் மட்டுமல்லாமல் தனது தாய் மற்றும் சகோதரியையும் சேர்த்து கவனித்து வந்துள்ளார் கிருஷ்ணன். இந்த நிலையில், நேற்று கிருஷ்ணனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அவரது உடல் வீட்டில் இறுதிச் சடங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, மகன் இறந்த தகவலறிந்து வந்த தாய் பகவதி மற்றும் சகோதரி மாலா இருவரும் கதறி அழுதுள்ளனர்.
அப்போது தாய் பகவதி, "இனிமேல் தன்னையும், தனது மகளையும் கவனிக்க யார் இருக்கிறார்" என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லி அழுது புலம்பியுள்ளார். அதைத் தொடர்ந்து, தனது மகளை அழைத்துக் கொண்டு, கிருஷ்ணனின் வீட்டிலிருந்து அவர்கள் வசிக்கும் வீட்டிற்குச் சென்ற பகவதி நீண்ட நேரமாகியும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.