தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மீன்வளத் துறை உத்தரவை ரத்து செய்க" - இணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தூத்துக்குடி மீனவர்கள்!!

சங்கு எடுப்போர் படகுகளில் பொருத்தப்பட்டுள்ள இயந்திர மோட்டார் பம்புகளை அகற்ற வேண்டும் என மீன்வளத்துறை அறிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சங்கு குளிக்கும் மீனவர்கள் 300க்கும் மேற்பட்டோர் மீன்வளத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அதிகாரி தலைமையில் பேச்சுவார்த்தை, சங்கு குளிக்கும் மீனவர்கள் சங்க தலைவர் சந்தன செல்வன்
அதிகாரி தலைமையில் பேச்சுவார்த்தை, சங்கு குளிக்கும் மீனவர்கள் சங்க தலைவர் சந்தன செல்வன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2024, 6:33 PM IST

தூத்துக்குடி :தூத்துக்குடி, திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மூலம் சுமார் 5,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் சங்கு எடுக்கும் தொழிலில் பல தலைமுறைகளாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் கடந்த 22ம் தேதி கடலில் சங்கு எடுப்போர் படகுகளில் பொருத்தப்பட்டுள்ள இயந்திர மோட்டார் பம்புகளை அகற்ற வேண்டும். இல்லையென்றால், படகுகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (நவ 25) சங்கு குளிக்கும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த உத்தரவை மீன்வளத் துறை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தை 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் முற்றுகையிட்டனர்.

சங்கு குளிக்கும் மீனவர்கள் சங்க தலைவர் சந்தன செல்வன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதைத்தொடர்ந்து, மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திரா தலைமையில் மீன்வளத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதையும் படிங்க :"ராமதாஸுக்கு வேற வேல இல்ல" - அதானி குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் ரியாக்ஷன்!

இதுதொடர்பாக சங்கு குளிக்கும் மீனவர்கள் சங்க தலைவர் சந்தன செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மீன்வளத்துறை அறிவித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகளிடம் முன் வைத்துள்ளோம். எங்கள் வாழ்வாதாரமே சங்கு தொழில் தான். பல தலைமுறைகளாகவும், பாரம்பரியமாகவும் இந்த தொழிலை செய்து வருகிறோம்.

இந்த தொழிலை அழிக்க வேண்டாம் என அதிகாரிகளிடம் கூறி உள்ளோம். ஆனால், தற்போது அதிகாரிகளிடம் நடந்த பேச்சுவார்த்தையில், இந்த தொழிலை நீங்கள் நிறுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த தொழிலை நிறுத்தினால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும்.

எங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்துள்ளோம். எங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பதில் வந்தால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். அந்நிய செலவானியை மீட்டு கொடுக்கின்ற தொழிலை ஏன் புறக்கணிக்கிறார்கள் என தெரியவில்லை. எனவே, மீன்வளத்துறை தங்களுக்கு வழக்கமாக சங்கு எடுக்கும் முறைக்கு அனுமதி அளிக்க வேண்டுமென தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details