விருதுநகர்: வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3ஆம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளில் உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, வட்ட சில்லு, தங்க மணி, சூது பவள மணி உட்பட 3,350 க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் பணியின் போது மனித உருவத்தின் சுடுமண் கால் பகுதி, விலங்கின் பல், பளிங்கு கல் கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் பொன்னுசாமி கூறுகையில், அகழாய்வில் ஏற்கனவே சுடுமண் மனித உருவத்தின் தலைப்பகுதி கிடைத்த நிலையில், தற்போது உடைந்த நிலையில் கால் பகுதி கிடைத்துள்ளது. மேலும் முன்னோர்கள் இங்கு விலங்குகளை வளர்க்கவும், வேட்டையாடவும் செய்துள்ளனர். தற்போது கிடைத்துள்ள பல் எந்த விலங்குடையது, என்ன காலம் என்பது முழுமையான ஆய்விற்கு பின் தெரியவரும் என தெரிவித்தார்.