சென்னை: டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 2 மணியளவில், சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் பெருமளவு இந்திய பணம், சட்ட விரோதமாக கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், அதிகாலையில் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை, தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது ரஷ்ய நாட்டைச் சேர்ந்த, அர்டிமி பிடீகோவ் என்பவர், அவருடைய மனைவி அனஸ்டசீயா ஓரோபெவா, மற்றும் அவர்களின் கைக்குழந்தை ஆகியோர், டெல்லியில் இருந்து, இந்த விமானத்தில் சென்னை வந்திருந்தனர். சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் ரஷ்ய நாட்டு தம்பதியை நிறுத்தி விசாரித்தனர். ஆனால் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதை தொடர்ந்து, அவர்களுடைய சூட்கேஸ் மற்றும் பைகளை திறந்து பார்த்து சோதனை நடத்தினர்.
அதற்குள் கட்டுக் கட்டாக இந்திய பணம் பெருமளவு இருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் மொத்தமாக சுமார் ரூ.25 லட்சத்திற்கும் அதிகமான பணம் இருந்துள்ளது. ரஷ்ய நாட்டை சேர்ந்த தம்பதிக்கு, இந்திய பணம் எவ்வாறு கிடைத்தது? இந்தப் பணத்தை டெல்லியில் இருந்து சென்னைக்கு எதற்காக கொண்டு வந்தனர்? என்று அதிகாரிகள் கேள்வி எழுப்பி விசாரணை செய்தனர். ஆனால் அவர்கள் சரியான பதில் கூறவில்லை. அதோடு இந்த பணத்திற்கான முறையான ஆவணங்களும் அவர்களிடம் இல்லை.