கோவை:கோவை பெரியநாயக்கன்பாளையம் டேங்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு கடந்த மே 7ஆம் தேதி ஜேசுராஜா என்பவர் அறிமுகமாகி உள்ளார். அப்போது ஜேசுராஜா தான் மதுரையில் சிறப்பு தாசில்தாராக இருப்பதாகவும் அதைபோல் சக்திவேலின் மனைவிக்கும் கோவை மாநகராட்சியில் பில் கலெக்டர் வேலை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
மேலும் இந்த வேலையை வாங்கிதருவதற்கு ரூபாய் 2 லட்சத்து 25 ஆயிரம் ம்ட்டும் தந்தால் போதும் என கூறியுள்ளார். இதனையடுத்து சக்திவேலும் முன்பணமாக ரூபாய் 25 ஆயிரத்தை ஜேசுராஜாவிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் மீதி பணம் ரூபாய் 2 லட்சத்தை பெற சக்திவேல் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த சக்திவேல், ஜேசுராஜாவிடம் அவரது அடையாள அட்டையை காட்டுமாறு கேட்டுள்ளார். இதில் சுதரித்துக்கொண்ட ஜேசுராஜா சக்திவேலுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அவர் வீட்டில் இருந்து தப்பியுள்ளார்.
புகார்:இதுகுறித்து சக்திவேல் பெரியநாயக்கன்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன் மற்றும் உதவி ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் சாந்திமேடு அருகே காரில் வந்த ஜேசுராஜாவை போலிசார் கைது செய்தனர்.
விசாரணை: இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசரணையில் ஜேசுராஜா தான் மதுரை தாசில்தாராக வேலை செய்வதாக பொய்யான தகவலை கூறி சக்திவேலுவிடம் 25 ஆயிரத்தை ஏமாற்றி பெற்றதை ஒப்புகொண்டார். மேலும் ஜேசுராஜா விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நல்லமங்களம் பகுதியை சேர்ந்தவர் ஆனால் தற்போது சாந்திமேடு, லட்சுமிபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருவதும் தெரிய வந்துள்ளது.