புதுக்கோட்டை:திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து, புதுக்கோட்டை, சின்னப்பா பூங்கா அருகே தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அதிமுக செயலாளர் கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு, தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் பேசிய வைகோ, “நமது எதிர்காலம் ஜனநாயகமாக இருக்கப் போகிறதா, பாசிச வெறி பிடித்த சர்வாதிகாரமாக இருக்கப் போகிறதா என்பதை தீர்மானிக்கின்ற காலம் தான் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு ஏழு முறை வந்து என்ன பேசுகிறார்? திராவிட இயக்கத்தை ஒழிக்காமல் விடமாட்டேன். திராவிட இயக்கத்தை கூண்டோடு அழிப்பேன். இதைச் செய்யாமல் போகமாட்டேன் என்று பேசியுள்ளார். மிஸ்டர் நரேந்திர மோடி, திராவிடத்தின் வரலாறு உங்களுக்கு தெரியாது.
பெரியார், அண்ணா போன்றோர்கள் கட்டிக்காத்த இந்த திராவிட இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நியூட்ரினோ திட்டத்தைக் கொண்டு வருவதற்கு பாஜக துடிக்கிறது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தை காப்பதற்கு, சர்வாதிகாரம் தலைதூக்கும் என்ற எண்ணத்தில், நாடாளுமன்றத்தின் ஜனநாயகத்தை மாற்றி விட்டு, ஜனாதிபதி முறையில் ஜனாதிபதி தான் தலைவர், மற்றவர்கள் அனைவரும் அவருக்கு அடங்கி நடக்க வேண்டும், அமெரிக்காவைப் போல, ரஷ்யாவைப் போல அந்த வழியில் கொண்டு போகும் திட்டத்தை மோடி வகுத்துள்ளார். அதற்காகத்தான் தமிழ்நாட்டைச் சுற்றி சுற்றி வருகிறார்.