மதுரை: மதுரை மாவட்டம், தல்லாகுளம் அருகில் மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி உள்ளது. இங்கு 4500 மாணவர்கள் பல்வேறு துறைகளில் பயில்கின்றனர். மேலும், நிரந்தரப் பேராசிரியர்கள் 24 பேரும், தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் 80 பேரும், தற்காலிக விரிவுரையாளர்கள் 20 பேரும் இங்குப் பணிபுரிந்து வருகின்றனர்.
முனைவர்.புவனேஸ்வரன் உறுப்புக் கல்லூரியின் பொறுப்பு முதல்வராகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணி செய்து வருகிறார். இந்நிலையில், தற்போது பொறுப்பு முதல்வராகப் பணியாற்றி வரும் புவனேஸ்வரனை மாற்றக்கூடாது எனவும், அவரை நிரந்தர முதல்வராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று(ஏப்.29) பேராசிரியர்களும், மாணவர்களும் கல்லூரி வளாகத்திற்குள் இருப்பு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து கௌரவ விரிவுரையாளர் ராமர் கூறுகையில், "சிறப்புடன் செயல்பட்டு வரும் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரனுக்கு இங்குள்ள சில பேராசிரியர்கள் தொடர்ந்து இடையூறு செய்து வருகின்றனர். இங்குப் பணியாற்றும் நிரந்தரம் அல்லாத பேராசிரியர்களுக்கு ஈபிஎஃப் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்க உறுதுணையாக இருந்தார்.
படிக்கின்ற மாணவர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மற்றொரு உறுப்புக் கல்லூரியாகத் திகழ்ந்த திருமங்கலம் கல்லூரியில் முதல்வராகப் பொறுப்பேற்று, சிறப்புடன் அதனைச் செயல்படுத்திக் காட்டியவர். அவரை மீண்டும் அங்கே முதல்வராகப் பணியில் அமர அங்குள்ள பேராசிரியர்களும், மாணவர்களும் இன்று வரை வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஆனால் தற்போது அந்தக் கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றம் பெற்று விட்டது.
பல்வேறு சிக்கல்களைத் தவிர்த்து இந்தக் கல்லூரிக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகப் பொறுப்பில் வந்து அமர்ந்தார். அப்போதிலிருந்து மிகச் சிறப்பான முறையில் பணியாற்றி கல்லூரியைப் பல்வேறு வகையிலும் மேம்படுத்தினார்.