சென்னை:இளைஞராக இருக்கும்போது மு.க.ஸ்டாலின் ஆக தாம் பெறாத பதவிகளை தற்போது தமது மகன் உதய நிதி ஸ்டாலினுக்கு கொடுத்து மு.க.ஸ்டாலின் அழகு பார்ப்பதாகத்தான் இப்போது திமுகவில் உள்ள இளைஞரணியினர் கருதுகின்றனர். மு.க.ஸ்டாலின் பதவிகளை பெறுவதற்கு அவர் வளர்ந்த காலகட்டத்திலான திமுகவின் சூழல் அவருக்கு எதிராகவே இருந்தன. ஆனால், தமிழகத்தில் அரசியல் ரீதியான பல நிகழ்வுகள் இளைஞர்களை முன்னிலைப்படுத்தியே நிகழ்ந்திருக்கின்றன.
இளைஞர்கள் அங்கம் வகித்த அண்ணா அமைச்சரவை:தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம், அதன் விளைவாக 1967ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது என அனைத்துமே இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் எழுச்சியின் காரணமாகவே சாத்தியம் ஆனது. எனவேதான் தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா தலைமையில் திமுக 1967ஆம் ஆண்டு முதன்முதலாக ஆட்சிக்கு வந்தபோது அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்கள் எல்லோரும் இளைஞர்கள்தான். முதலமைச்சராக இருந்த அண்ணாதுரையின் வயது மட்டும்தான் அப்போது 58. மற்ற அமைச்சர்கள் பெரும்பாலும் இளைஞர்கள்தான். அமைச்சரவையில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் வி.ஆர்.நெடுஞ்செழியன் அவர் கல்வி அமைச்சராக அண்ணா அமைச்சரவையில் இடம் பெற்ற போது அவரது வயது 47. குறிப்பாக அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட கருணாநிதியின் வயது 43 தான். அப்போது உணவு துறை அமைச்சராக இருந்த கே.ஏ மதியழகன் வயது 41 மட்டுமே. சட்டம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்த மாதவன் வயது வெறும் 32 மட்டும்தான் என்பது பலருக்கு ஆச்சர்யம் அளிப்பதாக இருக்கலாம். இப்படி திமுகவின் முதலாவது அமைச்சரவையில் இளைஞர்கள் ஆதிக்கம் அதிகம் இருந்தது.
திமுகவில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த எம்.ஜி.ஆர்., வைகோ ஆகியோர் திமுகவில் இருந்து வெளியேறிய போது திமுகவின் இளைஞர் அணியை வழி நடத்தியவர் மு.க.ஸ்டாலின். இளைஞரணி அமைப்பு 1980ல் மதுரையில் உள்ள ஜான்சிராணி பூங்காவில் தொடங்கப்பட்டது. 1982ல் திருச்சியில் 2ஆம் ஆண்டு விழாவில் 7 பேர் கொண்ட ஒரு அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக் குழுவில் மு.க.ஸ்டாலின் ஒரு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புக் குழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவிலும், ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணி கட்டியமைக்கப்பட்டது. இதனால் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது. ஆனால், இளைஞரணி செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை கட்சியில் வகித்திருந்தபோதிலும் மு.க.ஸ்டாலின் அமைச்சராக ஆக்கப்பட்டது 2006ஆம் ஆண்டுதான். அவரது 53 வது வயதில்தான் அமைச்சராக முடிந்தது. 1996ஆம் ஆண்டே அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்க வேண்டும் என்று கட்சியில் அவரது பங்களிப்பை அறிந்தவர்களுக்கு தெரியும். ஆனால், அப்போது அவர் அமைச்சராக அறிவிக்கப்படவில்லை. அதற்கு பதில் அவருக்கு சென்னை மேயர் பதவி அளிக்கப்பட்டது.
மு.க.ஸ்டாலினுக்கு பேராசிரியர் க.அன்பழகன் ஆதரவு :கட்சியில், ஆட்சியில் இளைஞர்களுக்கு பங்களிப்பு வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலினும், அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கின்றனர். ஆனால், கருணாநிதி தமது அமைச்சரவையில் தம்மோடு ஆரம்ப காலகட்டத்தில் இருந்து கட்சியில் துணை நின்ற அனுபவசாலியான அரசியல்வாதிகளுக்கே கட்சி பதவிகளையும், ஆட்சி பொறுப்புகளையும் பகிர்ந்து அளித்தார். கருணாநிதி ஆக்டிவாக இருக்கும்போதே மு.க.ஸ்டாலினுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் பொறுப்புகள் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் திமுகவின் முதுபெரும் அரசியல்வாதியாக இருந்து மறைந்தவர் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன். 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பேராசிரியர் க.அன்பழகன், ஸ்டாலின் கழகத்துக்கு மட்டும் தளபதி அல்ல. வருங்காலத்தில் ஒட்டுமொத்த தமிழனத்தின் தளதியாக வருவார். ஸ்டாலின்தான் எதிர்காலத்தில் இந்த கழகத்தை கட்டிக்காப்பாற்றுவார் என்று அடையாளம் காட்டுகின்றோம் என்று பேசி இருந்தார். மு.க.ஸ்டாலினுக்கு பொறுப்புகள் கொடுக்கப்பட்டால் அவரது இன்னொரு மகன் மு.க.அழகிரி கோபித்து கொள்வாரோ என்று கருணாநிதி கருதியது உண்டு. அதனால்தான் மு.க.ஸ்டாலினுக்கு உரிய காலகட்டத்தில் அவருக்கு பதவிகள் அளிக்கப்படவில்லை.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியில் இளைஞர்கள் :ஆனால், திமுகவக்கு மாற்றாக முன்வைக்கப்பட்ட எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக 1977ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தது. அப்போது அமைச்சராக இடம் பெற்ற பண்ருட்டி ராமசந்திரன் 40 வயதே ஆனவர். அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொதுப்பணித்துறை பதவி வழங்கப்பட்டது. உள்ளாட்சித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட காளிமுத்துவுக்கு 35 வயதுதான். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பொன்னையனுக்கு அப்போது 35 வயதுதான். ஜி.ஆர் எட்மண்ட் என்ற 47 வயது இளைஞருக்கு உணவுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இளைஞர்களுக்கு ஆட்சியிலும், கட்சியிலும் பொறுப்புகள் வழங்கப்பட்டன. அவருக்குப் பின் வந்த ஜெயலலிதா ஆட்சியிலும் கட்சியிலும் புதிய முகங்களுக்கு இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தார். ஜெயலலிதாவின் 1991ஆம் ஆண்டு அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர் முத்துசாமிக்கு அப்போது 43வயதுதான். கே.ஏ.செங்கோட்டையனுக்கும் 43 வயதுதான் ஆகியிருந்தது. எஸ்.ரகுபதி அமைச்சராக இருந்தார். அவரது வயது 41 மட்டுமே. அப்போதைய ஜெயலலிதா அமைச்சரவையில் இளம் வயது அமைச்சராக மீன்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் அமைச்சர் டி.ஜெயக்குமார். முக்கிய துறைகளின் அமைச்சர்களாக இளைஞர்கள் நியமிக்கப்பட்டனர்.
அதிமுகவுடன் ஒப்பிடும் போது திமுகவில் இளைஞர்களுக்கு, புதுமுகங்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டதில்லை. குறிப்பாக கருணாநிதி தலைமையிலான கடைசி திமுக ஆட்சியான 2006ஆம் ஆண்டு பெரும்பாலான அமைச்சர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான். இந்த ஆட்சி காலத்தில்தான் மு.க.ஸ்டாலினுக்கு அவரது 53 ஆவது வயதில்தான் உள்ளாட்சித்துறை அமைச்சர் வாய்ப்பு அளிக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு திமுக அமைச்சரவையில் தமிழரசி, கீதா ஜீவன், சுரேஷ் ராஜன் போன்ற சிலர் மட்டுமே இளைஞர்கள். 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது 2009 ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி துணை முதலமைச்சர் பதவியும் அவருக்கு அளிக்கப்பட்டடது. அதாவது 56ஆவது வயதில்தான் அவர் துணை முதலமைச்சர் ஆனார்.
கருணாநிதி ஆக்டிவ் ஆக இருந்தவரை கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 2015ஆம் ஆண்டுப்பின்னர் அவருக்கு உடல் நலக்குறைவு நேரிட்டபோது ஆக்டிவ் அரசியலில் அவரால் ஈடுபட முடியவில்லை. இதனால்தான் கடந்த 2017ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலினுக்கு திமுகவில் செயல் தலைவர் என்ற பதவி அளிக்கப்பட்டது. திமுக வரலாற்றில் இது புதுமையாக பார்க்கப்பட்டது.
வாரிசு அரசியல் என கூறி ஸ்டாலினுக்கு பதவி மறுத்த கருணாநிதி:ஆனால், இப்போது 47 வயதிலேயே துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றிருக்கிறார். இது பல ஆண்டுகளாக திமுக வட்டாரத்தில் பெரும் ஏக்கமாக இருந்த இளைஞர்களுக்கு வாய்ப்பு என்ற குரலுக்கு பதில் அளிக்கும் வகையில் கொடுக்கப்பட்ட பதவிதான். ஆனால், வெகுகாலம் மு.க.ஸ்டாலின் காத்திருந்தார். இப்போது உயநிதி ஸ்டாலின் அடுத்தடுத்து சில ஆண்டுகளிலேயே பொறுப்புகளும் பதவிகளும் வழங்கப்படுகின்றன என்று அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அப்போதைய காலகட்டத்தில் அதிமுக எனும் எதிர்முகாமில் இன்றைக்கு கட்சியில் சேர்ந்து நாளைக்கே அமைச்சர் பதவியை பெறும் சூழல் இருந்தது. ஆனால், திமுகவில் அப்படியான சூழல் இல்லை கருணாநிதி இருந்தவரை அதனை அனுமதிக்கவில்லை. மு.க.ஸ்டாலினுக்கு ஏன் பதவி வழங்கவில்லை என்று செய்தியாளர்கள் பலமுறை கருணாநிதியிடம் கேள்விகள் எழுப்பியபோதெலாம் ஆன்மீக மடத்தை போல வாரிசுகளை பீடத்தின் தலைமைக்கு அமர்த்துவது போல திமுக செயல்படாது என்பதை குறிக்கும் வகையில் திமுக சங்கரமடம் அல்ல என்று குறிப்பிட்டிருக்கிறார். 60வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு அரசியல் பக்குவம், ஆட்சி நிர்வாகத்தில் முடிவுகள் எடுக்கக்கூடிய திறன் கிடைக்கப்பெறும் என்று அவர் நம்பியிருந்தார். கட்சியில் படிப்படியாக பல்வேறு கட்சிப்பதவிகளை வகித்த பின்னர்தான் உயர் பதவிகளுக்கு வாய்ப்புகள் அளித்தார். 49 வயதில் முதலமைச்சர் ஆன கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் 69 வயதில்தான் முதலமைச்சராக ஆக முடிந்தது.
உதய நிதி ஸ்டாலின் அவரது தந்தையைப் போல தீவிர அரசியலில் ஈடுபட்டதில்லை. கருணாநிதி 1984-ம் ஆண்டு தேர்தல் சுற்றுப்பயணம் சென்றபோது ஏழு வயது சிறுவனாக அரது மடியில் அர்ந்து தமிழகம் முழுக்க பயணித்தவர் உதயநிதி. அப்போதுதான் தி.மு.க-வினர் அந்த குழந்தையைப் பார்க்கின்றனர். தளபதியோட பிள்ளைப்பா என்று கட்சிக்காரர்களால் அறியப்படுகிறார்.
டான்போஸ்கோ பள்ளியில் படித்தவர். 1999-ம் ஆண்டு ஒடிசாவில் வீசிய புயலால் அந்த மாநிலம் சீர்குலைந்தது. அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஒடிசாவுக்கு நிவாரணப்பொருட்களை சேகரித்து அனுப்ப வேண்டும் என்று தமிழக மக்களுக்கு உத்தரவிட்டார். அப்போது இளைஞராக இருந்த உதயநிதி தம் சக நண்பர்களுடன் இணைந்து ஒடிசா நிவாரணத்துக்காக பொருட்கள், நிதி உதவியையும் சேகரித்து தமது தாத்தாவிடம் கொடுத்தார். அப்போது அவரது பணியை தாத்தா வெகுவாக பாராட்டினார்.