சென்னை:இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய ஏழுக்கும் மேற்பட்டோர் முதல் மதிப்பெண்கள் பெற்றதை எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
நீட் தேர்வு முடிவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக வைத்து வந்த நிலையில், நீட் தேர்வு ரத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “திராவிட முன்னேற்றக் கழகம் தான் நீட் தேர்வின் தீமைகளை முதன்முதலில் கண்டுணர்ந்து, பெரிய அளவில் அதற்கெதிராக பரப்புரை மேற்கொண்டது.
ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை மேற்கொள்வதால் ஏற்படும் தாக்கங்களை ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்றினை அமைத்தோம். அக்குழு மிக விரிவான தரவு பகுப்பாய்வுகள், மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கிய அறிக்கை வெளியிடப்பட்டது. நீட் தேர்வு ஏழைகளுக்கும், சமூகநீதிக்கும் எதிரானது என்பதை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பிற மாநில அரசுகளுக்கும் அந்த அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது.