சென்னை: சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில், மகாவிஷ்ணு என்பவர் குருகுலங்கள் தொடர்பாக பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையானது. அரசுப் பள்ளியில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்துவதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என எக்ஸ் தளத்தில் ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், "மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை - தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்"