தேனி: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இந்த நிலையில், தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.10) மாலை தேனி லட்சுமிபுரத்தில் நடைபெறவுள்ள பிரமாண்ட பொதுக்கூட்ட மேடையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
அதற்காக நேற்று இரவு 9 மணி அளவில் தேனிக்கு வந்த மு.க.ஸ்டாலின், பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஓய்வெடுத்துவிட்டு, இன்று காலை 7 மணிக்கு மேல், தேனி பெரியகுளம் சாலையில் உள்ள உழவர் சந்தை நுழைவாயிலில் இருந்து நடைபயணமாகச் சென்றார். அப்போது, அங்கு காய்கறி வியாபரம் செய்யும் வியாபாரியிடமும், பொதுமக்களிடமும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
பொதுமக்கள் ஸ்டாலினுடன் செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுத்தும், கை கொடுத்தும் மகிழ்ந்தனர். மேலும், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஸ்டாலினிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். அதற்கு, பதிலளித்த மு.க.ஸ்டாலின், உங்களது கோரிக்கை அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.
அப்போது, பழ வியாபாரி ஒருவர், முதலமைச்சர் உருவத்தினை பழத்தில் வரைந்து, அதனை முதலமைச்சரிடம் கொடுத்தார். மேலும், அங்கு பெற்றோர்களுடன் காய்கறி வாங்கிட வந்திருந்த சிறுவர், சிறுமியர்களிடம் படிப்பு குறித்தும் முதலமைச்சர் கேட்டறிந்தார். பின்னர், அங்கிருந்த தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார்.