சென்னை:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என நான்கு முனைப்போட்டி நிலவும் சூழலில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின், 'X' வலைத்தளப் பக்கத்தில் தொண்டர்களுக்கான கடிதம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில், "இந்தியாவை மீட்பதற்கான அறப்போராட்டக் களத்தில் உங்களுடன் இணைந்து நானும் நிற்கிறேன். தமிழ்நாடு இழந்த உரிமைகளை மீட்கவும், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் வளம் பெறவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிற கூட்டாட்சிக் கருத்தியலைக் காத்திடவும், பாசிச சக்திகளை வீழ்த்திடவும் நாடாளுமன்றத் தேர்தல் எனும் ஜனநாயகக் களத்தை எதிர்கொள்கிறோம்.
திமுக தலைமையிலான கொள்கைக் கூட்டணி தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் உள்ள 40 தொகுதிகளைத் தோழமைக் கட்சிகளுடன் இணக்கமாக பங்கிட்டுக் கொண்டு களம் காண ஆயத்தமாகிவிட்டது. எந்தவொரு தேர்தல் களமாக இருந்தாலும், எதனை அடிப்படை நோக்கமாகக் கொண்டு களம் காண்கிறோம் என்பதை தேர்தல் அறிக்கை வாயிலாக தெள்ளத் தெளிவாக தெரிவித்து மக்களைச் சந்திப்பதுதான் அண்ணா காலத்திலிருந்து திமுக கடைபிடித்து வருகின்ற தேர்தல் நடைமுறை. அதன் வெளிப்பாடுதான், திமுகவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 64 பக்க தேர்தல் அறிக்கை.
மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் பெறும் வகையில், அரசியல் சட்டத்தில் உரிய திருத்தங்கள், ஆளுநரின் அதிகாரங்களுக்கு கடிவாளம், சி.ஏ.ஏ சட்டம் ரத்து, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு, பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது, உழவர்களின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட இன்னும் பல வாக்குறுதிகளுடன் அனைத்து தரப்பு மக்களுக்குமான தேர்தல் அறிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ளது.
உண்மையான புதிய இந்தியாவை கட்டமைத்திடும் உன்னத லட்சியத்துடன், தோழமைக் கட்சிகளுடன் இணைந்து திமுக களம் காண்கிறது. மேலும், திமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களில் அனுபவமிக்கவர்களும் உண்டு; அறிமுக வேட்பாளர்களும் உண்டு. கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளும் நமது தொகுதிகள்தான். அவர்களின் வேட்பாளர்களும் நம்மவர்கள்தான். அவர்களின் சின்னங்களும் நம்முடையதுதான்.
நாற்பது தொகுதிகளில் தனித்தனி வேட்பாளர்கள் நின்றாலும், அனைத்து தொகுதிகளிலும் உங்களில் ஒருவனான இந்த ஸ்டாலின்தான் வேட்பாளராக நிற்கிறேன் என்கிற உணர்வுடனும், கொள்கை உறவுடனும், இந்தியா கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டும் என்ற உத்வேகத்துடனும் களப் பணியாற்றிட வேண்டும் என ஒவ்வொரு தொண்டரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.