சென்னை:விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ந.புகழேந்தி உடல் நலக்குறைவால் காலமானதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, கடந்த ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, நேற்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்ததியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு முதலைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில், “தமிழ்நாடு மக்கள் திமுக மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதையே இடைத்தேர்தல் வெற்றி காட்டுகிறது. 3 ஆண்டு கால நல்லாட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ்தான் இந்த வெற்றி. அதனை வழங்கிய விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் போட்டியிடாமல் அதிமுக ஒதுங்கி நின்று, தனது கள்ளக்கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. திமுக வெளிப்படையான ஜனநாயக நெறிமுறைப்படி களம் கண்டது. வாக்காளர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்று பார்க்காமல், திட்டத்தில் பயன் பெறத் தகுதியுடையவரா என்பதை மட்டும் பார்த்து, அதன் பயனைக் கிடைக்கச் செய்கின்ற வகையில் திமுக அரசு உள்ளது.
மக்கள் எதிர்பார்க்கின்ற திட்டங்களை அறிவித்து அவற்றை முழுமையாகச் செயல்படுத்துவதும், யாரும் எதிர்பாராத அசம்பாவித நிகழ்வு நடந்தால், அதற்கும் பொறுப்பேற்று அதனை சரிசெய்யும் நேர்மைத் திறனும், நிர்வாகத் திறனும் கொண்டது திமுக. மக்களுக்கு மேலும் பல திட்டங்கள் தொடரும். அதில் விக்கிரவாண்டி தொகுதியும் பயன்பெறும்.