சென்னை: நாட்டின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா (86), உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு, ஐசியூவில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று (அக்.9) இரவு 11.30 மணியளவில் ரத்தன் டாடா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது, ரத்தன் டாடா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில், "இந்தியத் தொழில்துறையின் பெருந்தூணாகவும், பணிவு மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த ரத்தன் டாடா மறைந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.
அவரது தொலைநோக்கு மிக்க தலைமை, டாடா குழுமத்தின் வளர்ச்சியை வடிவமைத்ததோடு, அறத்துடன் கூடிய தொழில் புரிதலுக்கான அளவுகோலாகவும் உலக அளவில் விளங்கியது. நாட்டின் வளர்ச்சியிலும், புதுமையிலும், மனிதநேயச் செயல்பாடுகளிலும் ரத்தன் டாடா காட்டிய இடையறாத அர்ப்பணிப்பினால் கோடிக்கணக்கானோரின் வாழ்வில் அழியாத் தடத்தினை அவர் பதித்துச் சென்றுள்ளார்.
இந்தியா ஒரு மாபெரும் ஆளுமையை இழந்துவிட்டது. எனினும் அவரது வாழ்வும் பணியும் அடுத்த பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும். இந்த துயர்மிகு தருணத்தில், ரத்தன் டாடாவின் குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் டாடா குழுமத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில், "நெறிமுறை, வணிக நடைமுறைகள் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு பல தலைமுறைகளுக்கு எதிரொலிக்கும் ஒரு தரத்தை கொண்டது. நமது தேசத்திற்கும், மக்களுக்கும் டாடாவின் பங்களிப்புகள் அளவிட முடியாதவை" என பதிவிட்டுள்ளார்.
நாதக கட்சி தலைவர் கமல்ஹாசன் அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில், "ரத்தன் டாடா என்னுடைய ஹீரோ, என் வாழ்நாள் முழுவதும் நான் பின்பற்ற முயற்சித்தவர். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவரது பங்களிப்புகள், என்றென்றும் நவீன இந்தியாவின் கதையில் பொறிக்கப்படும் ஒரு தேசிய பொக்கிஷம். அவரது உண்மையான செல்வம் பொருள் செல்வத்தில் இல்லை, மாறாக அவரது நெறிமுறைகள், நேர்மை, பணிவு மற்றும் தேசபக்தி ஆகியவற்றில் உள்ளது" எனத் பதிவிட்டுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில், "டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும் இந்திய தொழில்துறை வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியவருமான ரத்தன் டாடா காலமானார் என்ற செய்தி வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
இதையும் படிங்க: தொழில்துறையின் ஜாம்பவான் ரத்தன் டாடா மறைவு: ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்!
இந்தியாவை மையமாக கொண்டு தொடங்கப்பட்ட டாடா நிறுவனத்தை தன் தொலைநோக்கு சிந்தனையால் உலகளாவிய வணிகமாக மாற்றிய அவரது மறைவு இந்திய தொழில்துறைக்கு பேரிழப்பாகும். எந்த தொழிலாக இருந்தாலும் அதில் நேர்மையை கடைபிடிப்பதில் உறுதியாக இருந்த ரத்தன் டாடாவை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் டாடா குழுமத்திற்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.