விருதுநகர்:தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட வாரியாக கள ஆய்வு செய்ய இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, கோவையில் ஆய்வைத் தொடங்கிய முதலமைச்சர், விருதுநகர் மாவட்டத்தில் நேற்று, இன்று (நவ.10) ஆகிய 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்கிறார். அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று (நவ.09) வருகை புரிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மாவட்ட எல்லையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
இதனையடுத்து, விருதுநகர் கன்னிச்சேரி புதூரில் செயல்படும் பட்டாசு ஆலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பட்டாசு ஆலையில் பணியாற்றிய பெண் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர், அவர்களின் குறைகளைக் கேட்டறிந்துள்ளார். குறிப்பாக, பணி நெருக்கடி, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கிறதா? என்றும் முதலமைச்சர் கேட்டறிந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சூலக்கரையில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு காப்பகத்தில் உள்ள மாணவியர்களிடம் கலந்துரையாடியுள்ளார். தொடர்ந்து, அங்கிருந்த மாணவிகளுக்கு இனிப்புகளை பரிசாக வழங்கியுள்ளார். அப்போது மாணவிகள் அப்பா என்று அழைத்த நிலையில், மாணவி ஒருவர் உணர்ச்சிப்பூர்வமாக பேசியதை முதலமைச்சர் புன்னகையுடன் ரசித்து பார்த்தார். இந்த சந்திப்பை, “அப்பா.. நிறைவான நாள்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
பின்னர், மாவட்ட நிர்வாகிகளுடன் முதலமைச்சர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். அதில் பேசிய முதலமைச்சர், “ஆட்சிக்கான கள ஆய்வோடு - கட்சிக்கான கழக ஆய்வும் சேர்த்து நடத்தினால் தான் பயணத்தின் நோக்கம் முழுமையாகும். திராவிட இயக்கத்திற்கு விதை தூவிய மாபெரும் மனிதர்கள் வாழ்ந்த ஊர் விருதுநகர்.
இதையும் படிங்க:"திமுக கூட்டணி உடைய அதிக வாய்ப்பு" - தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!
மக்களை சந்திக்க வேண்டும்: நாடாளுமன்றத் தேர்தலில் 100-க்கு 100 வெற்றியை நாம் பெற்றோம். அதே போன்ற வெற்றியை வரும் சட்டமன்றத் தேர்தலிலும் பெற வேண்டும். மக்களைச் சந்தித்து கொள்கைகள் மற்றும் சாதனைகளைச் கூறுங்கள். தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் திண்ணைப் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். இளைஞர்கள் மற்றும் மகளிரைக் கழகத்தை நோக்கி ஈர்ப்பதற்கான பணிகளை மேற்கொள்ளுங்கள்.
இளைஞர்கள் எதிர்காலத்தின் விதைகள்:இளைஞர்களுக்குக் கொள்கைகளை விதைப்பது மிகவும் முக்கியம். அவர்கள்தான் எதிர்காலத்திற்கான விதைகள். பேச்சாளர்களை அழைத்து பாசறைக் கூட்டங்களைச் நடத்துங்கள். ஒவ்வொரு பகுதியிலும் கொள்கை வீரர்களாக 10 அல்லது 15 இளைஞர்களை உருவாக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை. பெண்கள் ஆதரவை நமக்கான வாக்குகளாக மாற்ற வேண்டியது அவசியம்.
பெண் வாக்களர்கள் 3 முறை சந்திப்பு:ஒவ்வொரு பெண் வாக்காளரையும் தேர்தலுக்கு முன்பாக மூன்று முறையாவது சந்திக்க வேண்டும் என்கிற அசைன்மெண்ட் உங்கள் மாவட்டத்தில் இருக்கும் கழகப் பெண் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட வேண்டும். நம்முடைய சாதனைகளை மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பதுதான் நம்முடைய வேலை. பணிகளுக்கிடையே ஒரு நாளுக்கு இரண்டு மணி நேரத்தைக் கட்சிக்காக ஒதுக்குங்கள். வார இறுதியில் ஒரு நாளை முழுமையாகக் கழகப் பணிக்கு ஒதுக்குங்கள்.
உங்களுக்கு நான் நிர்ணயித்துள்ள இலக்கு எவ்வளவு?:200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் கடுமையா உழைக்க வேண்டும். வேட்பாளர் யார் என்று தலைமைக் கழகம் அறிவிக்கும். வெற்றி பெறுபவர்தான் வேட்பாளராக நிறுத்தப்படுவார். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். எனவே, திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரைச் சட்டமன்றத்துக்கு அனுப்ப உழைக்க வேண்டியது உங்கள் கடமை.
ஏழாவது முறையாகத் ஆட்சி: ஏழாவது முறை ஆட்சி அமைக்க விருதுநகரில் இருக்கும் ஏழு தொகுதிகளிலும் கழகக் கூட்டணி வெற்றி பெற்றது என்ற செய்தி எனக்கு வர வேண்டும். தமிழ்நாட்டில் கழக ஆட்சி அமைந்தது என்ற வரலாற்றை எழுத கழகத்தினர் வீரியத்துடன் செயல்படுங்கள். வெற்றியை ஈட்டித் தாருங்கள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்