சென்னை: கடந்த 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக வென்றதன் மூலம் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார். அதற்குப் பிறகு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியான காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார்.
இதனையடுத்து, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் களம் கண்டது. இதிலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தன. முன்னதாக, 2019 மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதி மட்டும் அதிமுகவுக்கு கிடைத்த நிலையில், தற்போது அந்த தொகுதியும் திமுகவசம் உள்ளது.
இதனைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக - பாமக - நாதக என மும்முனைப் போட்டி நிலவியது. இதிலும், 67 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அமோக வெற்றி பெற்றார். இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கும் திமுக ஆயத்தம் ஆகி வருகிறது.