சென்னை:நாட்டில் 18வது மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19 முதல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வைத்து, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதனையடுத்து, செய்தியாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளித்தார்.
அதன்படி, திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிட்டதாக பாஜக விமர்சனம் குறித்த கேள்விக்கு, “யாருக்கு காய்ச்சல் வந்துள்ளது என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெளிவாக பதில் அளித்துள்ளார். தோல்வி பயம் வந்த காரணத்தால், பிரதமர் அடிக்கடி தமிழ்நாடு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் தமிழ்நாட்டிற்கு வரட்டும், வேண்டாம் என சொல்லவில்லை, தேர்தல் நேரத்தில் வரும் பிரதமர், தமிழ்நாட்டிற்கு மழை வெள்ளம் வந்து சோதனை ஏற்பட்டபோது வந்திருந்து ஆறுதல் சொல்லியிருந்தால் நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்” என ஸ்டாலின் பதில் அளித்தார்.
இதனையடுத்து, காங்கிரஸ் கட்சிக்கு கேட்ட தொகுதி ஒதுக்கீடு சரியாக செய்யவில்லை என்று ஒரு கருத்துள்ளதே என்றும், விசிக கூட்டணியில் ஒரு பொது தொகுதி கேட்கப்பட்ட நிலையில், ஏன் ஒதுக்கப்படவில்லை என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “விசிக ஒரு தனி தொகுதி கேட்டனர். அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு உடன் பேசி, விசிகவினர் திருப்தி அடைந்து, அதற்கான விளக்கத்தை விசிக தலைவர் திருமாவே சொல்லிவிட்டார்” என்றார்.
மேலும், காங்கிரஸ் கட்சி தேசிய கட்சி, மற்ற மாநிலங்களில் உள்ள பிரச்னைகள் சரி செய்துவிட்டு, தமிழ்நாட்டில் உள்ள கூட்டணி குறித்து பேசுவதற்கு தாமதமானது என்பதால், ஆரமர்ந்து பொறுமையாக பேசிதான் முடிக்கப்பட்டதாகவும், அவசரபட்டு, ஆத்திரப்பட்டு, கோபதாபம் ஏற்பட்டு முடிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பாஜக தமிழ்நாட்டில் தொடர்ந்து வளர்ந்து வருவதாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது, இது உண்மையா என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், “நீங்களே உண்மையா என கேட்கிறீர்கள். நான் என்ன பதில் சொல்வது” என சுருங்கக் கூறினார்.
பின்னர், பாஜகவை எப்படி எதிர்கொள்ளப் போகிறது திமுக என்ற கேள்விக்கு, “பிரச்சாரத்தின் மூலமாக எதிர்கொள்வோம். நாங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லை. ஆளுநரே போதும் எங்களுக்காக பிரச்சாரம் செய்கிறார். இப்போது பிரதமரும் அவருடன் சேர்ந்து திமுகவிற்காக வெற்றியை தேடி தருவதற்காக பிரச்சாரம் செய்கிறார். இவர்கள் இரண்டு பேரும் போதும், மீண்டும் திமுகவை வெற்றிபெற வைப்பார்கள்” என பதில் கூறினார்.
மேலும், பிரதமர் தொடர்ந்து வாரிசு அரசியல் குறித்து பேசிக்கொண்டு உள்ளார், அதனை எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கு, “பலமுறை சொல்லிவிட்டோம். இது குடும்ப கட்சி. குடும்ப பாச உணர்வோடு திமுகவை அண்ணாவும், கலைஞரும் உருவாக்கி உள்ளனர். வாரிசு அடிப்படையில் பதவிகள் கொடுப்பது இல்லை. உழைப்பின் அடிப்படையில் பொறுப்புகளும் பல பணிகளும் கொடுக்கப்படுகிறது” என தெளிவுபடுத்தினார்.
இதனையடுத்து, திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள எந்த அம்சத்தை பிற மாநிலங்கள் பின்பற்ற வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, நீங்களே படித்து பாருங்கள், நீங்கள் கேட்கும் அனைத்து அம்சங்களும் தேர்தல் அறிக்கையில் இருக்கும் என்றார். தொடர்ந்து, அதிமுக கூட்டணி இன்னும் முடிவு செய்யவில்லை, ஆனால் திமுக கூட்டணி அனைத்து பணிகளையும் முடிந்துள்ளது, பாஜக இம்முறை இரண்டாவது இடத்திற்கு வரும் என்று சொல்கிறார்கள், எனவே களம் எப்படி இருக்கிறது என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
இதற்கு, “அதிமுக கூட்டணி முடியாததற்கு நாங்கள் காரணமல்ல. எங்கள் கூட்டணி நாங்கள் முடித்துள்ளோம். பாஜக வளர்ந்து வருகிறது என அவர்கள் சொல்கிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு தெரியும், யார் வளர்ந்துள்ளார்கள், யார் இரண்டாவது இடம், யார் மூன்றாவது இடம், யார் NO-வை விட குறைவாக வாக்கு பெறுவார்கள் என தெரியும்” என பதில் அளித்துள்ளார். இதனையடுத்து, திமுக தேர்தல் அறிக்கை பார்ப்பதற்கு மத்திய அரசின் திட்டங்களுக்கான வாக்குறுதியாக உள்ளது என்றும், இது ஒட்டுமொத்த இந்தியா கூட்டணிக்கான அறிவிப்பா அல்லது திமுகவிற்கான வாக்குறுதியா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எங்கள் கூட்டணி தான் ஆட்சி அமைக்கப் போகிறது என்றும், அந்த தைரியத்தில் இந்த வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.
இறுதியாக, உங்கள் மனது படி பிரதமர் வேட்பாளராக யாரை முன்நிறுத்துவீர்கள் என்ற கேள்விக்கு, இந்தியாவே எங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் பதிலளித்தார்.
இதையும் படிங்க:திமுகவில் 6 சிட்டிங் எம்பிக்களுக்கு கல்தா.. வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்?