சென்னை:மனிதநேய ஜனநாயகக் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளராகச் செயல்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியைக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுகளில் நடைபெற்ற கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு புதிய பொதுச்செயலாளராக எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக, பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி திருவல்லிக்கேணியில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில், தமிமுன் அன்சாரி கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டதாகப் புதிய பொதுச்செயலாளரான எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அறிவித்தார்.
இந்த நிலையில், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மனிதநேய ஜனநாயகக் கட்சியின் கொள்கை விரோத செயல்களில் ஈடுபட்டதால் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து கடந்த பொதுக்குழுவில் நீக்கப்பட்டார்.
பொதுக்குழு உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட இந்த முடிவின் தீர்மான நகல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது. மேலும், கட்சியின் பெயரை தமிமுன் அன்சாரி பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
மனிதநேய ஜனநாயகக் கட்சியின் ஒன்பதாம் ஆண்டு தொடக்க விழாவைத் தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடி வரும் இவ்வேளையில், தமிமுன் அன்சாரி தனது ஆதரவாளர்களை அழைத்து நாளை 28.02.2024 புதன் அன்று மயிலாடுதுறையில் பொதுக்குழு என்ற பெயரில் ஒரு பொதுக்கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடு செய்வதாக அறிகிறோம்.
பொதுக்குழு என்ற பெயரில் கூட்டப்படும் இப்பொதுக்கூட்டம் சட்டவிரோதமானது. எனவே, இது சம்பந்தமாகச் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் எந்தக் குழப்பமும் அடையாமல் கட்சிப் பணியைத் தொடர்ந்து வீரியத்துடன் செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தேர்தல் பத்திரம் மூலம் பல கோடி நன்கொடை பெற்றது பாஜக.. ஆனந்த் சீனிவாசன் குற்றச்சாட்டு!