திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (18). தேங்காய் உரிக்கும் வேலை செய்து வரும் இவர், கடந்த ஞாயிற்றுகிழமை முதல் காணாமல் போன நிலையில், அவரது பெற்றோர் குமரனை பல இடங்களில் தேடியுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், குமரன் அதே பகுதியில் உள்ள தயாளன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் உயிரிழந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், இதுகுறித்து உடனடியாக உமராபாத் காவல்துறையினர் மற்றும் ஆம்பூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், பாழடைந்த கிணற்றில் இருந்து இளைஞரின் உடலை மீட்டனர். அதனைத் தொடர்ந்து இளைஞரின் உடலை உமராபாத் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, இளைஞர் குடிபோதையில் பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறேதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு பேருந்துகளில் 50% காலாவதியானவை! போக்குவரத்துக் கழகம் அதிர்ச்சி தகவல்! - TN assembly sessions 2024