சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் ராணிப்பேட்டை: சோளிங்கரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் மலைக்கோயில் உள்ளது. இந்த மலை கோயில் மீது செல்ல ரோப்கார் அமைக்க வேண்டுமென பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ரோப்கார் அமைக்கும் பணிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. தற்போது 90% பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் பணிகளை அமைச்சர்கள் சேகர்பாபு, காந்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். மேலும் ரோப் காரில் பயணித்து கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “2010ஆம் ஆண்டில் ரூ.8.40 கோடி மதிப்பீட்டில் சோளிங்கர் நரசிம்மர் கோயிலில் ரோப்கார் அமைக்கும் பணிகள் தொடங்கியது. ஆனால் கடந்த 10 ஆண்டு காலமாக பணிகள் நிறைவு செய்யவில்லை. 2021இல் தேர்தலை மனதில் வைத்து ரோப்கார் கல்வெட்டு திறப்பு விழாவை இப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நடத்தினார்.
இதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு சென்றதைத் தொடர்ந்து, இப்போது ரோப் கார் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரோப்கார் மட்டும் இன்றி ரூ.12 கோடி செலவில் விமான நிலையத்தில் இருப்பது போன்று லிஃப்ட், உணவு வசதி, ஓய்வு அறை, தங்கும் அறை உள்ளிட்டவை செய்து தரப்பட்டுள்ளது. நரசிம்மரே மகிழ்ச்சி அடையும் வகையில் பணிகள் நடைபெற்று உள்ளது.
ரோப்கார் திட்டப் பணியை பக்தர்களுக்கு அர்ப்பணித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகு விரைவில் நடத்தி வைப்பார். இங்கு சின்னமலையில் ஒரு கோடி ரூபாய் செலவில் திருக்கோயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வயது முதிர்ந்தவர்கள் இல்லம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ரூ.2.50 கோடியில் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் திருக்கழுக்குன்றம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 6 கோயில்களில் ரோப்கார் வசதி அமைப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா? என்று ஆய்வு செய்யப்படுகிறது. இறைவனை வயது மூத்தவர்களும் சுலபமாக தரிசிக்கும் வகையில் பணிகள் செய்யப்படுகிறது. இப்பணிகளை சட்டசபையில் பாமக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பாராட்டுகின்றனர்.
குறிப்பாக, திருத்தணி கோயிலில் பண்டிகை காலங்களில் வெளிமாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களால் அதிக கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க உள்ளூர் பக்தர்களை அனுமதிப்பதில் தாமதம் இருக்கலாம். ஆனால், உள்ளூர் பக்தர்கள் புறக்கணிக்கப்படாமல் அவர்களும் சாமி தரிசனம் செய்து வருவதாகவும், தேவையற்ற குற்றச்சாட்டுகளை சமூக வலைத்தளங்களில் கூறி அவப்பெயர் ஏற்படுத்த அண்ணாமலை முயற்சி செய்கிறார்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் ராணிப்பேட்டையில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சித் தகவல்..