சென்னை: திமுக இளைஞரணியின் 45வது தொடக்க விழா, சென்னை தேனாம்பேட்டையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "முதலமைச்சருக்கு துணையாக நான் வரவேண்டும் என்று இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, பத்திரிகையில் வரும் வதந்தி, கிசுகிசுக்களை எல்லாம் நம்பி நீங்கள் தீர்மானம் செய்திருக்கிறீர்கள். எனக்கு எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறக்கமாட்டேன் என்று கூறினார்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் ஒரு சில பத்திரிகைகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளிநாட்டு பயணத்திற்கு முன்பு அமைச்சரவையை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பாக உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாகவும் செய்திகள் வெளியிட்டிருந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
முன்னதாக விழா மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "எப்படியாவது இரண்டு அல்லது மூன்று சீட் ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கையில், எந்த முறையும் இல்லாத அளவிற்கு மோடி ஆறு முறை தமிழகத்திற்கு வந்திருந்தார். 1000 முறை அவர் வந்தாலும் தமிழக மக்கள் உங்களை ஏற்றுகொள்ள மாட்டார்கள் என அப்பவே கூறியிருந்தேன். அதை நிருபித்து காட்டி, 40க்கு 40க்கு தொகுதிகளிலும் வெற்றியை கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி" என்றார்.