தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

300 ஆண்டுகள் பழமையான மங்கம்மாள் சத்திரம்.. விருதுநகர் அருகே அமைச்சர் ஆய்வு! - MANGAMMAL CHATRAM RENOVATION

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்கம்மாள் சத்திரத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு செய்தார்.

மங்கம்மாள் சத்திரத்தை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு
மங்கம்மாள் சத்திரத்தை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2024, 5:04 PM IST

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகில் உள்ள மறையூரில் 300 ஆண்டுகள் பழமையான ராணி மங்கம்மாள் சத்திரம் அமைந்துள்ளது. இது கி.பி.1689 முதல் 1706 காலத்தில் தனது பேரனான விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் சார்பாளராக மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் காலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

வழிபோக்கர்களுக்கு உணவளித்த சத்திரம்:இது தனுஷ்கோடி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்டு, பிற்காலத்தில் பள்ளியாக இயங்கிவந்தது. இந்நிலையில் போதிய பாரம்பரிப்பு இல்லாததால் சத்திரத்தை சுற்றிலும் மரங்கள் வளர்ந்துள்ளன. இந்நிலையில் இந்த மரங்களை அகற்றி, பழுது நீக்கி பாரம்பரியச் சின்னமாகப் பாதுகாக்க வேண்டும் என பொது மக்கள் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.

பழமையான ராணி மங்கம்மாள் சத்திரம்:இந்நிலையில் இந்த சத்திரத்தை நிதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அமைச்சர், “நரிக்குடி ஒன்றியம் மறையூரில் அமைந்துள்ள ராணி மங்கம்மாள் அன்னச்சத்திரம் 14, 15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. இப்பகுதி வழியாக செல்லுபவர்களுக்கு நாள்தோறும் உணவு வழங்கி பசியை போக்கிய பெருமை இந்த சத்திரத்திற்கு உண்டு.

இதையும் படிங்க:“ராஜராஜ சோழனின் சிலை வெளியே உள்ளது வேதனை அளிக்கிறது” - கவிஞர் வைரமுத்து!

தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது:இச்சத்திரம் தொல்லியல் முக்கியத்துவம் கொண்டது. பராமரிப்பு இன்றி பாழடைந்த நிலையில் உள்ளது. இச்சத்திரத்தை சீரமைத்து இதன் தொன்மையை மீட்டெடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்.

ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்:அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளோடு‌ இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டோம். எங்களோடு இணைந்து தொல்லியல் துறை அலுவலர்களும் இந்தக் கட்டடத்தின் பழமை குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வினுடைய அடிப்படையில் சத்திரத்தின் பழமை மாறாத வகையில் சீரமைப்பு பணிகள் நடத்தப்படும். மீண்டும் பாரம்பரிய நினைவுச் சின்னமாக சத்திரம் மீட்டெடுக்க ஏற்பாடு செய்யப்படும்.

வெம்பக்கோட்டை அகழ்வாய்வு:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் இந்த மூன்றரை ஆண்டு காலத்தில் தொல்லியல் மற்றும் பாரம்பரிய முக்கியத்துவம் சார்ந்த இடங்களை பாதுகாத்திட தனி கவனம் செலுத்தி வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் நடக்கக்கூடிய வெம்பக்கோட்டை அகழ்வாய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

எனவே தொல்லியல் வரலாற்றில் விருதுநகர் மாவட்டத்தின் முக்கியத்துவம் கருதி பல இடங்களில் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நரிக்குடியில் அமைந்துள்ள புகழ்வாய்ந்த வழிப்போக்கர் அன்னச்சத்திர மண்டபத்தை சிறந்த முறையில் சீரமைத்து அதை பாரம்பரிய சின்னமாக பொலிவு பெற மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கும்” எனக் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details