தேவையில்லாத வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்து நேற்று முந்தினம் (ஜன.24) முதல் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட போது, தேவைப்படும் வசதிகள் குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், "ஜன.24ம் தேதியில் இருந்து ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என தெரிவித்ததையடுத்து, 90 சதவீதம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தங்களது பேருந்துகளை இயக்கி ஒத்துழைப்பு அளித்ததற்கு நன்றி.
மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 440 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது, அதனைத் தொடர்ந்து 333 பேருந்துகள் வந்தடைந்துள்ளது. ஏற்கனவே ஆம்னி பேருந்து சங்கங்கள் சிஎம்டிஏ அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் படி பேருந்துகளை இயக்கத் துவங்கியவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்த பேருந்துகளை இயக்கும் போது, இன்றைக்கு முதல் நாள் என்பதால், சில சங்கடங்கள் விளைந்திருக்கிறது. அவற்றை வரும் காலத்தில் சரிசெய்ய வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள். அரசு தரப்பில் இருந்து கூடுதல் வசதிகள் செய்ய வேண்டும் என்றால், அதற்கான பணிகளும் துவங்கி இருக்கின்றனர். மேலும் தென் மாவட்டங்களில் இருந்து வந்த சில ஆம்னி பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். பெரும்பாலான பேருந்துகள் உள்ளே வந்தன. இனி இது போன்ற செயல்கள் நடைபெறாது.
மேலும் கிளாம்பாக்கத்தில் பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு, இனி கேயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்லக்கூடாது. ஆம்னி பேருந்துகளின் சேவையானது இனி கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படாது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும்.
ஆம்னி பேருந்துகளில் வரும் பயணிகளின் வசதிக்காக, சிஎம்டிஏ சார்பில் 1400 ஃபிரீ பெய்டு ஆட்டோக்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் பயணிகள் தங்களது சொந்த இடங்களுக்கு செல்லலாம். அதேபோல 200 கால்டாக்சி நிறுத்துவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது, 300 ஓலா, ஊபர் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், ஒருசில சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கிளாம்பாக்கத்தில் பார்க்கிங் வசதி இல்லை என தேவையில்லாமல் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இங்கே 300 ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு தவறான செய்தியை மக்களிடத்திலே பரப்பக் கூடாது. அப்படி பேசுபவர்கள் நேரில் வந்து பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.
இனி இதுபோன்று, குழப்பமான செய்திகளை, தேவையில்லாமல் மக்களிடத்திலே வதந்திகளை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில் முதற்கட்டமாக ஆம்னி பேருந்துகளுக்கான 27 புக்கிங் கவுண்டர்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கோயம்பேட்டில் 5 ஆயிரம் சதுர அடிதான் வழங்கப்பட்டிருந்தது, ஆனால் கிளாம்பாக்கத்தில் கூடுதலாக 2 ஆயிரம் சதுர அடி என மொத்தம் 7 ஆயிரம் சதுர அடி இடம் வழங்கப்பட்டுள்ளது.
ஆகையால், ஒரு சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தேவையில்லாத பேட்டி கொடுப்பதை தவிர்த்து விட்டு பேருந்துகள் இயக்க வேண்டும். இல்லை எனில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்கள் வசதிக்கு ஏற்ப கூடுதலாக 200 நடை பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தாம்பரத்திலிருந்து 10 நிமிடத்திற்கு ஒருமுறை கோயம்பேட்டில் பேருந்து இயக்கப்படுகின்றது. கிண்டிக்கு 3 நிமிடத்திலும், அதே போன்று தாம்பரம் - கிளாம்பாக்கம் 10 நிமிடத்திற்கு ஒருமுறை வடிவில்லா பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் தேவையறிந்து அதனை சரி செய்யும் நிலையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்த் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு பத்ம விருதுகள்.. முழு பட்டியல்!