சென்னை :தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்பட வேண்டிய சிறப்புப் பேருந்துகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தீபாவளி பண்டிகையை யொட்டி வரும் அக் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களில் சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து மொத்தமாக 14 ஆயிரத்து 16 பேருந்துகள் இயக்கப்படும்.
தீபாவளி பண்டிகை நிறைவடைந்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக 12 ஆயிரத்து 606 பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.
பேருந்து முன்பதிவு :நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app, www.tnstc.in போன்ற இணையதளங்கள் மூலமாக முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்த்து, செங்கல்பட்டு அல்லது வண்டலூர் சாலையை பயன்படுத்த வேண்டும். கடந்த ஆண்டுகளை போலவே நடப்பு ஆண்டிலும் போதுமான பேருந்துகள் இயக்கப்படும்.
புகார் எண்கள் : தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இயக்கம் குறித்து அறிந்துக் கொள்ளவும், புகார் தெரிவிக்கவும் 94450 14436 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தெரிவிக்ககலாம்.
மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், 044-24749002, 044- 26280445, 044 26281611 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். கடந்தாண்டை போல தனியார் பேருந்து நிறுவனத்தினருடன் வரும் 24ம் தேதி கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிக்கப்படும்.
பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய 2 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும்
இயக்கப்படும். பொதுமக்கள் வசதிக்காக உதவி மையம் அமைக்கப்படுகிறது. போதுமான பேருந்துகளை இயக்க உள்ளோம்.
தனியார் பேருந்துகள் : தனியார் பேருந்துகளை வாடைக்கு அமர்த்தியும் இயக்க உள்ளோம். தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதற்கு வெளிப்படையான டெண்டர் விடப்பட்டு, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.51.25 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.