தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மின் வாரியத்துக்கும் மத்திய அரசுக்கும் தான் தொடர்பு.. அதானி குழுமத்துடன் அல்ல!" - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

அதானி நிறுவனத்துக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். மின் கொள்முதல் தொடர்பாக மத்திய அரசுடன் தான் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி
கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 7 hours ago

கரூர்:அதானி நிறுவனத்துக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

கரூர் மாநகராட்சி சார்பில் காமராஜர் மார்க்கெட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாக கட்டுமான பணிகளை தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "இன்று காலை முதல் ஊடகங்களில் அதானி, நிறுவனத்தின் பங்குகள் சரிந்துள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக, அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை.

அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu)

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் அதானி நிறுவனத்துக்கும் தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இதுதொடர்பாக மின்சாரத் துறை அமைச்சராகிய தன்னையோ அல்லது அதிகாரிகளையோ தொடர்பு கொண்டு எந்த நேரமும் விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்.

"மத்திய அரசுடன் தான் ஒப்பந்தம்":தமிழ்நாடு மின்சார துறை தமிழக மின்வாரியத்தின் தேவையை கருத்தில் கொண்டு மின் பற்றாக்குறையை போக்குவதற்கு மத்திய மின்சார வாரியத்தின் மூலம் சுமார் 1500 மெகாவாட் மின்சாரம் பெறுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் சூரிய மின் உற்பத்தி மூலம் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக சோலார் எனர்ஜி எனும் மத்திய அரசு மின் நிறுவனத்தின் மூலமே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஆட்சி காலத்தில் 7.01 பைசா என்ற விலை விகிதத்தில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 2.61 பைசா என்ற அளவில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. இது மிக மிக குறைவாகும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிலக்கரி மூலம் பெறப்படும் மின் தேவைக்கு போதுமான அளவு நிலக்கரி கையிருப்பு உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்னகம் மூலம் பெறப்பட்ட புகார்களில் 71% புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டுள்ளது" என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

கரூரில் புதிய பேருந்து நிலைய பணிகள் எப்போது துவங்கும் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலைய பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும். நீதிமன்றத்தில் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு வழங்காமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கரூர் புதிய பேருந்து நிலைய பணிகள் துவங்குவதற்கு வசதியாக விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

கோயம்பள்ளி மூலப்பாளையம் மேம்பால கட்டுமான பணிகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இத்திட்டத்திற்கு இணைப்பு சாலை அமைக்கப்படாமல் அப்படியே விடப்பட்டது. தற்போது திட்டத்திற்கான நிதி அளவு அதிகமாக தேவைப்படுவதால் அதனை குறைத்து கணக்கிட்டு விரைவில் இணைப்பு சாலைகள் அமைத்து பணிகள் துவங்கும்" என்று அமைச்சர் பதிலளித்தார்.

அமைச்சரின் இந்த ஆய்வின்போது கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் கனகராஜ், ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details